திரைவிமர்சனம்

 

சேவல்                                                                                           

பஞ்சும் நெருப்புமான காம்பினேஷன் ஹரிக்கும்-பரத்திற்கும் அமைந்திருக்கிறது.  முதல் ரீலில் ஆரம்பித்து வணக்கம் போடும்வரை பரத்தின் வேகம் பாஸ்பரஸ்.


 

பூ வியாபாரி ராஜேஷின் மகனான பரத், பொருப்பில்லாமல் பொழுதை கழிக்கும் இளஞ்சேவல். கோயில் குருக்களின் மகள் பூனம் மேல் காதல்கொள்ளும் பரத்திற்கு ஒரு பரிட்சை வைக்கிறார் நாயகி. அந்த பரிட்சையில் பல பாடங்களை கற்கும் பரத், பொருப்புள்ள இளைஞனாக மாறுகிறார். இப்போது பூனம் மனசுக்குள்ளும் பரத் வந்துவிட, இவர்களின் காதலை பூகம்பமாய் பிளக்கும் சம்பவங்கள் அரங்கேரத் தொடங்குகிறது.

அக்கா சிம்ரனை திடீரென புற்றுநோய்  தாக்க, அத்தானுக்கு இரண்டாவதாய் வாக்கப்படுகிறார் பூனம். இப்போது அத்தானும் விபத்தில் இறந்துவிட, கொழுந்தன் கிருஷ்ணா,வில்லன் சம்பத்ராஜின் காம துரத்தல் மறுபக்கம் என சோதனைக்கும், வேதனைக்கும் சொந்தமாகும் காதலியை பரத் மீட்டெடுப்பதே மீதி கதை.

கிராமத்து காஸ்ட்யூமில் ஆரம்பித்து, நெல்லை வழக்கு மொழி பேசுவதுவரை கதாபாத்திரத்தில் தன்னை சரியாக பொருத்திக்கொள்வதற்காக பரத் நிறைய உழைத்திருக்கிறார். முந்தைய படங்களை காட்டிலும் கூடுதலாக காமெடி லாவகமும் கை வந்திருக்கிறது. 'என்னை ஏமாத்திட்ட குற்ற உணர்ச்சியில்லாம நீ சந்தோஷமா வாழ்ந்தாலே போதும்' என காதலியின் சந்தோஷத்திற்காக உருகும் காட்சியில் நம்மையும் கலங்கடிக்கிறார்.


 

மொட்டையடிக்கும் காட்சியில்கூட இமேஜ் பார்க்காமல் கேரக்டருக்காக ஒத்துழைத்திருக்கும் புதுமுகம் பூனம்பஜ்வாவின் டெடிகேஷனுக்காக பாராட்டலாம்.
சற்று இடைவேளைக்கு பிறகு இரண்டாம் இன்னிங்சை தொடங்கியிருக்கும் சிம்ரனுக்கு இதில் நாயகியின் அக்கா வேடமாக இருந்தாலும் பக்கா வேடம். பரத் தன்னிடம்தான் காதலை சொல்லவருகிறார் என நினைத்து காட்டும் ரியாக்‌ஷனாகட்டும், புற்றுநோய் வந்து நொறுங்கும் இடமாகட்டும் சோகம் சொட்டவைக்கும் நடிப்பு.

கதையுடன் பினைந்த காமெடியில் வடிவேலு -பரத்தின் கூட்டணி வயிறுகுலுங்கவைக்கிறது. காதல் தூதுவிட சிம்ரனை துரத்தும் கட்டங்களில் விடாத சிரிப்பில் நெஞ்சுவலியே வந்துவிடுகிறது. ராஜேஷ், கிருஷ்ணா, சம்பத்ராஜ் ஆகியோரும் பாராட்டும்படியான நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் 'துளசி செடிய...' 'தாயாரம்மா தாயாரு...' பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம்.


 

'தமிழ்', ‘ஐயா' படங்களுக்கு பிறகு திருப்தியளிக்கும் கதையை தந்திருக்கிறார் ஹரி. 2008, 1989.1991 என்ற பிளாஷ்பேக்குகள் அவசியப்படாதபோது வருட குழப்பமில்லாத திரைக்கதையை தந்திருக்கலாம். பிராமண சம்பிரதாயங்களை எதிர்த்து புரட்சி கருத்து பேசும் காலமெல்லாம் மலையேறிவிட்டதால் கிளைமாக்ஸிற்கு முந்தைய காட்சிகள் சவ சவ... இந்த குறைகளையெல்லாம் தவிர்த்திருந்தால் சேவல் இன்னும் சப்தமாக கூவியிருக்கும். 

<<முற்செல்ல