திரைவிமர்சனம்

 

பீமா

ந(ர)கர வாழ்க்கையில் ஓசைபடாமல் நடந்துகொண்டிருக்கும் நிழல் உலகம் பற்றி லிங்குசாமியின் பங்குக்கு எடுத்திருக்கும் படம். கெட்டவர்களுக்கு கெட்டவனாக நல்லவர்களுக்கு நல்லவனாக வாழும் நாயகன் பாணியிலான தாதா பிரகாஷ்ராஜ். அவருக்கே வித்தை காட்டும் அதிரடி நாயகன் விக்ரம். பிரகாஷ்ராஜின் ஆட்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை விக்ரமின் புஜபலமும் புத்திசாலித்தனமும் முந்திக்கொண்டு முடிக்கிறது.

என்ன வேணும் உனக்கு? நேருக்கு நேர் மிரட்டும் பிரகாஷூக்கு பயப்படாத விக்ரம், அடியாளில் ஒருவராய் சேர்த்துக்கொள்ளப்பட ஆரம்பமாகிறது உயிர் வேட்டை.

போலீஸ் தூரத்தலில் ஒரு வீட்டின் ஓட்டை பிய்த்துக்கொண்டு குதிக்கும் விக்ரம், த்ரிஷாவின் மீது விழுந்து புரள, இதுவரை பார்த்திராத ஹீரோயின் சந்திப்பையும் அதனால் ஏற்படும் காதலையும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனரின் 'புதிய' சிந்தனையை பாராட்டும் கொடுமைக்கு ஆளாகிறோம். இன்னொரு தாதா ரகுவரனின் எதிர்ப்பு, புதிய போலீஸ் கமிஷனராக வரும் ஆசிஷ்வித்யார்த்தி வைக்கும் குறி உட்பட சகல எதிர்ப்புகளையும் சந்திக்கும் பிரகாஷ்ராஜின் அத்தனை சுமைகளையும், தனது தலையில் தூக்கி சுமக்கும் விக்ரமையும் ஒரு கட்டத்தில் தடம்மாற்றுகிறது காதல். அவரது வாழ்க்கையின் முடிவு என்னவாகிறது என்பது க்ளைமாக்ஸ்.

ஏற்கனவே வந்த தாதாயிச படங்களின் சாயல் இந்த கதையிலும் தென்படுவதே முதல் உறுத்தலாகிவிடுகிறது. அதை சொன்ன விதத்தில் மட்டும் காமிராமேன், ஸ்டண்ட் மாஸ்டர், காசை தண்ணீராய் செலவழித்திருக்கும் தயாரிப்பாளர் உதவியுடன் கொஞ்சம் உட்கார செய்கிறார் இயக்குனர்.

பத்துபேர் சூழ்ந்தாலும் ஒற்றை ஆளாய் அடிக்கும் விக்ரமை நம்பமுடிகிறது. அதற்கான உழைப்பு அவரது கட்டுமஸ்தான உடம்பில் காணமுடிகிறது. 'வா...வா...வா...' என சொல்லியழைத்து பின்ணியெடுக்கும் காட்சிகளில் சிங்கமாய் சிலிர்க்கும் விக்ரமிற்கு 'சத்தான' பாராட்டுக்கள். த்ரிஷாவின் மரணம் கண்டு துவண்டு விழும்போது பிரமாதம்.இந்த கதைக்கு தேவையில்லாத கேரக்டராய் திணிக்கப்பட்டிருக்கும் த்ரிஷா, பாவம் நடிக்க சந்தர்ப்பமின்றி தவித்திருக்கிறார். தன்மேல் விழுந்து புரண்ட ஒரே காரணத்திற்காக விக்ரம் மேல் காதலாகி கசிந்துருகுவதெல்லாம் காமெடி. வீட்டுக்கு தெரியாமல் விக்ரம் கட்டும் தாலியை ஏத்துக்கொள்வதும் நியாயமாக தெரியவில்லை.

பெரியவராக வரும் ரகுவரன், பிரகாஷ்ராஜின் வலக்காரமாக வரும் தலைவாசல் விஜய் உட்பட பலருக்கும் ஏற்கனவே நடித்து சலித்த அதே கேரக்டர்கள்தான். ஆசிஷ்வித்யார்த்தி மட்டும் நல்ல போலீஸ் அதிகாரியாக காட்டப்பட்டிருக்கிறார்.

படத்தின் இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர்தான். ஆங்கில படங்களுக்கு நிகரான நேர்த்தியை கண்டுகளிக்கமுடிகிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் 'ரகசிய கனவுகள்...', 'எனதுயிரே...' பாடல்கள் கேட்க கேட்க திகட்டாத மெலடி மெட்டுக்கள். பின்னணி இசையில் துப்பாக்கி சத்தத்திற்கு அதிகமாக உழைத்திருப்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

வசனம் எழுதுவதற்கு தனியாக எஸ். ராமகிருஷ்ணன். 'உங்களோட ஒரு நாள் வாழும் வாழ்க்கையே போதும்...' எத்தனையோ படங்களில் கேட்டு புளித்த வரியை எழுதுவதற்கு எஸ்.ராமகிருஷ்ணன் எதற்கு என்பது புரியவில்லை.

இரண்டாம் பாதியில் காட்டியிருக்கும் விறுவிறுப்பையும், மேக்கிங் ஸ்டைலையும் முதல் பாதியில் காட்டியிருந்தால் பீமா இன்னும் பலமானவனாக இருந்திருப்பான்.

"ஒருவன் தேர்ந்தெடுக்கும் பாதையே

அவனது முடிவையும் தீர்மானிக்கிறது"

க்ளைமாக்ஸில் வரும் இந்த வசனம் படத்திற்கும் பொருந்தும்.