திரைவிமர்சனம்

 

புலி வருது

கடைசியில் புலிவரப்போகிறது என்று நினைக்கும்படி ஒரு விஷயம். ஆனால், வருவது புலியல்ல மியாவ்தான் என்கிறார்கள். பஸ்சில் தூங்குகிற ஆசாமிகளை பார்த்து ஒரு சம்பவத்தை உருவாக்கி, அதை கொட்டாவி விடாமல் சுவாரஸ்யமாக பார்க்க வைத்த இயக்குனரின் சாமர்த்தியத்திற்கு ஒரு சபாஷ்.

நண்பனின் திருமணத்திற்கு மற்றொரு நண்பரான கருணாசுடன் பொள்ளாச்சிக்கு கிளம்புகிறார் ரமேஷ். தூக்கத்தில் கனவு வருகிறது. அதில், முகூர்த்த நேரத்தில் தாலி ஹோமகுண்டத்தில் விழுந்து எரிந்து போக, திருமணம் நின்று போகிறது. இந்த பெண்ணே வேண்டாம் என்று முடிவு செய்யும் நண்பனின் குடும்பத்தாரிடம் திருமணத்தை நிறுத்த வேண்டாம் என்று கெஞ்சுகிறார் ரமேஷ். ஆனால், அவர்களோ நீயாக இருந்தால் தாலி கட்டுவாயா என்று கேட்க, சம்மதிக்கிறார் ரமேஷ். மற்றொரு தாலி வாங்க டவுனுக்கு போகும் கருணாஸ் லாரியில் அடிபட்டு இறந்துவிட, இரண்டாவது கல்யாணமும் நின்று போகிறது. இதனால் மனமுடைகிற மணப்பெண்ணான மல்லிகாகபூர் தீக்குளித்து இறந்து போகிறார். இதெல்லாம் கனவுதானே என்று கல்யாணத்திற்கு போகிற ரமேஷ¨க்கு அதிர்ச்சி. அங்கே இவர் கனவில் கண்ட மல்லிகாகபூர்! ஆனால் மணப்பெண்ணாக அல்ல, தோழியாக. அந்த ஒரு விஷயத்தை தவிர மீதி எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்து வருகிற கனவில், மல்லிகாகபூருக்கும் ரமேஷ§க்கும் காதல் வருகிறது. ரமேஷின் அப்பா மணிவண்ணனுக்கு நெஞ்சுவலி வருகிறது. நிஜமாகவே இவருக்கு மல்லிகா மேல் காதல் வருகிறது.





திருமணம் நடக்கப்போகிற நேரத்தில் மேற்படி கனவு பலித்துவிடுமோ என்று ரமேஷ் அஞ்ச, அப்பாவின் உயிர்தான் முக்கியம் என்று கல்யாணத்தையே நிறுத்திவிடுகிறார். பிறகு எப்படி இருவரும் ஒன்றிணைகிறார்கள் என்பது மீதி.

கதாநாயகன் ரமேஷைவிட அதிக ஸ்கோர்களை அள்ளிக் கொள்வது கருணாஸ்தான். நன்றாக இருந்த தனக்கு மரண பயத்தை ஏற்படுத்திய நண்பனை அடிக்கடி கடிந்து கொள்வது ரசிக்கும்படி இருக்கிறது. கனவு பலித்துவிடப் போகிறதோ என்று அஞ்சிக் கொண்டிருக்கிற வேளையில் ஒரு பாதிரியாரை பார்க்கிறார்கள். ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வார் என்ற அவரிடம் ஆசிவாங்க போனால், அவரும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் கனவுகள் நிறைவேறட்டும் என்று ஆசிவழங்க, தியேட்டரே அதிர்கிறது. பல படங்களுக்கு பிறகு ரசிக்கும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார் கருணாஸ்.

கனவு காண்பதும் உளறுவதுமாகவே இருக்கிறார் ரமேஷ். மல்லிகாகபூரை மறக்கவும் முடியாமல், அப்பாவின் உயிரை வாங்கும் அந்த கனவை புறக்கணிக்கவும் முடியாமல் அவஸ்தைப்படுவதை இயற்கையாகவே அவரால் வெளிப்படுத்த முடிகிறது. டயலாக் பேசும்போதுதான் வார்த்தைகளில் வழ வழா!





புதுப்பெண்ணின் வெட்கம், திருமணம் நின்று போனபின் தவிப்பு என்று கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் மல்லிகாகபூர். கல்யாணத்திற்கு முன் வருங்கால கணவரோடு பைக்கில் போகும் எல்லா பெண்களின் ஏக்கத்தையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கனவுகளுக்கு பலன் உண்டா என்று மனோதத்துவ நிபுணர்களிடம் கேட்க போகிறார்கள். அவர்களோ, நம்பிக்கையை தருவதற்கு பதிலாக கனவில் வந்த சம்பவங்கள் 80 சதவீதம் நிச்சயமாக நடக்கும் என்று அவநம்பிக்கையை தருவது அதிர்ச்சி. திரைக்கதைக்காக டாக்டர்களின் பிரஸ்கிரிப்ஷனையே மாற்ற துணிந்திருப்பது அநியாயம்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேர் வருது பாடல் சரியான குத்தாட்டம். இதற்கு ஸ்ரீதரின் நடன அமைப்பும் பிரமாதம். ஒளிப்பதிவில் புரட்சிகள் படைக்கவில்லையென்றாலும் உறுத்தாமல் இருக்கிறது. ராஜசேகருக்கு பாராட்டுகள்.

இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் பாய்ந்திருக்கிறது மற்றுமொரு திரைக்கதை புலி!