திரைவிமர்சனம்

 

தாம் தூம்

முற்றுப்புள்ளியாகிவிட்ட ஜீவா என்ற மகா கலைஞன், ஒளிகளாய் வாழ்ந்திருக்கும் படம். அவர் நினைத்தது போலவே படம் வந்திருக்கிறதா என்ற கேள்விக்கு பதில், ஜீவாவின் ஆத்மாவிடமே கிடைக்கும்.

மருத்துவ பயிற்சிக்காக ரஷ்யா செல்கிறார் ஜெயம்ரவி. இரண்டு வாரத்தில் திரும்பி வந்ததும் காதலியுடன் திருமணம் என்ற கனவில் இருப்பவரை கம்பி எண்ணவைக்கிறது ரஷ்ய சூழ்நிலை. கொலை வழக்கு ஒன்றில் சிக்கும் நாயகன், தான் நிரபராதி என நிருபிக்க சந்தர்ப்பம் கிடைக்காததால் போலீஸிடமிருந்து தப்பிக்கிறார்.ஒரு பக்கம் ரஷ்ய தாதாக்களின் துரத்தல்,இன்னொரு பக்கம் போலீஸ் விரிக்கும் வலை என ஓடிக் கொண்டே இருக்கும் ரவிக்கு நல்ல நேரம் கிடைப்பதுடன் முடிகிறது கதை.


திரைக்கதையில் பொத்தல் போட்ட லாஜிக்கை சரிசெய்திருந்தால் ஆங்காங்கே தென்படும் குறைகள் இடம் தெரியாமல் போயிருக்கும். அதற்கான வாய்ப்புக்களை நழுவவிட்டிருப்பது யாரின் தவறோ?  முந்தைய படங்களைக் காட்டிலும் ரவி நடிப்பில், அழகில் கூடுதல் மெருகேறியுள்ளார்.கட்டிக்கப் போகும் காதலியுடன் காருக்குள் இளமை திருவிழா நடத்துவதாகட்டும், ஆக்‌ஷன் தீனிப் போடும் ரஷ்ய போர்சனாகட்டும் தனது கேரக்டருக்குள் திறம்பட பொருந்தியிருக்கிறார்.

 

கிராமத்து அழகோவியமாக வரும் கங்கனாவிற்கு  முதல் படம் என்றால் நம்பமுடியாத அளவிற்கு நடிப்பின் முதிர்ச்சியை காட்டியிருக்கிறார். வாண்டுகளுடன் சிறுபிள்ளையாட்டம் போடுவது, ஜெயம்ரவியை சீட்டாட்டத்தில் கவிழ்ப்பது என தமிழ் நாட்டு ரசிகர்களின் மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் ரகமாய் ரசிக்கவைக்கிறார். ஆற்றங்கரையில் நாயகனின் நினைவலைகளில் மென் சோகம் காட்டுமிடத்தில் பிரமாதம்.

ஜெயம்ரவிக்கு உதவி செய்யும் ரஷ்ய அரசின் வக்கீலாக வரும் லஷ்மிராய்க்கு பெரிதாக வாய்ப்பில்லை. முதல் முறையாக வில்லன் அரிதாரத்தில் ஜெயராம். இவர்தான் வில்லனாக இருப்பார் என முன்கூட்டியே கனித்துவிடும் சந்தர்ப்பங்கள் இருப்பதால் அவரது கதாபாத்திரத்திலும் உப்புசப்பில்லாமல் போகிறது. நேர்மையான நபர்கள்தான் தூதரக அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள். அப்படியிருக்க,லோக்கல் போதை கும்பலுடன் ஜெயராமிற்கு தொடர்பிருப்பதாக காட்டப்படுவது கதைக்கு ஒத்துவரவில்லை. கிராமத்தையும், நகரத்தையும் மாறி மாறிக் காட்டும் 'ரோஜா' காலத்து பாணியும் படத்தின் டெம்போவை குறைத்து அலுப்பூட்டலை ஏற்படுத்துகிறது.


 

ஹாரிஸ்ஜெயராஜின் இசையில் எல்லா பாடல்களுமே மயங்கடிக்கிறது. படத்தின் இன்னொரு ஹீரோவாக ஒளிப்பதிவு அற்புதம். வீட்டிற்கு தகவல் சொல்லத் தவிக்கும் நாயகன், போலீஸிடமிருந்து தப்பித்தப் பிறகு அதை மறந்து போவது ஏனோ ? குண்டடிப்பட்ட நிலையில் பைக்கில் கையை விரித்து காதலியின் நினைவில் மிதப்பதெல்லாம் எதார்த்தத்தை சிதைக்கிறது.

யார் வேண்டுமானாலும் எளிதாய் வசனம் எழுதிவிடக்கூடிய இந்த கதைக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எதற்கு? என்ற கேள்விகளெல்லாம் எழாமல் இருந்திருந்தால் படம் பார்ப்பவர்களும் தாம்தூமென்று மகிழ்ந்திருக்கலாம்.

<<முற்செல்ல