திரைவிமர்சனம்

 

வைத்தீஸ்வரன்

படத்தில் சாலமன் பாப்பையா இல்லாத குறைதான். மறுஜென்மம் உண்டா இல்லையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்த பொருத்தமான கதை.

அரசியல்வாதியான ஷாயாஜிஷிண்டே கோயில் நகைகளை கொள்ளையடிக்கிறார். இதை பார்க்கும் சரவணன் என்ற சிறுவனை கொலை செய்கிறார். மகன் போன இடத்துக்கே போக தற்கொலைக்கு முயலும் சரவணனின் தாயை தடுத்து நிறுத்துகிறார் ஜோதிடரான விஜயகுமார்.

"சரவணன் மறுபிறவி எடுப்பான்; அதுவரை காத்திரு" என்பவர் "சரவணன் கையால்தான் ஷாயாஜிஷிண்டேவுக்கு சாவு" என ஆரூடம் கூறி்ச்செல்ல அடு்த்தடுத்த காட்சிகளில் அனல் பற்ற ஆரம்பிக்கிறது. விஜயகுமார் சொல்வது பலிக்கிறதா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

சரவணன் மறுபிறவி எடுப்பான் என்று கூறும்போதே அது ஹீரோ சரத்தாகதான் இருப்பார் என்பதை சிறுபிள்ளைகள் கூட சொல்லிவிடமுடியும்.  எனினும் திரைக்கதையில் ஆங்காங்கே போடும் முடிச்சுகளால் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது படம்.

மருத்துவரான சரத்திடம் நீதான் சரவணனின் மறுபிறவி என விஜயகுமார் சொல்வதும், அதில் நம்பிக்கையின்றி சரத்குமார் செய்யும் தர்க்கமும் சூடான சுவாரஸ்யம். சீரியஸாக கதை ஆரம்பமாகும் நேரத்தில் காதலி மேக்னா நாயுடு பற்றி நண்பனிடம் விளக்கவுரை சொல்வது டாக்டர் கேரக்டரை ஆபரேஷன் செய்கிறது.


இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து தவமிருக்கும் தாய், மறுபிறவி உண்டா, இல்லையா என்ற கேள்விக்கு விடையின்றி தொடரும் குழப்பம் எல்லாம் சேர்ந்து இது பக்தி படமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.

இன்ஸ்பெக்டர் ரியாங்கானை கொலைசெய்ய கையாளும் டெக்னிக், சரவணன் யார் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்த நடத்தும் ஆள்மாறாட்ட கேம் ஆகியவை சூப்பர் ஐடியாக்கள்.

டி.வி. காம்பீயராக காட்டப்படும் மேக்னாநாயுடு, திடீரென ரிப்போட்டர் கேரக்டருக்கு மாறுவது லாஜிக் சறுக்கல். பாடல் காட்சிகளில் தாராளம் காட்டுவதை தவிர நடிப்பில் பாராட்டும்படியான அம்சங்கள் இல்லாததால் மேக்னா வெரி வீக்னா.

நிலநடுக்கம், சுனாமி வருவதுகூட எதிர்க்கட்சிகளின் சதி என ஷாயாஜி கர்ஜிக்கும் இடத்தில் தியேட்டரில எழும் கிளாப்ஸ் வி்ல்லனை காமெடியனாக்குகிறது.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் எல்லாமே கேட்ட நிமிடமே மறந்துவிடுகிறது. ஒளிப்பதிவாளரின் பணி நிறைவு.

'மறுஜென்மத்தை நம்புபவர்களுக்கு இவன் சரவணன்'; 'நம்பாதவர்களுக்கு பாலா' என இயக்குனர் விடை சொல்லி நழுவுவது புத்திசாலித்தனம்.

வைத்தீஸ்வரனை பார்க்கலாம்.