திரைவிமர்சனம்

 

சத்யம்                                                                                                              

பதவி சண்டை, பந்தாடும் போலீஸ், பாசக்கார அம்மாவை நாசம் பண்ணும் ரவுடிகள் என்று ரசிகனின் கண்களுக்கு பழக்கமான பயாஸ்கோப்தான். ஆனாலும், ஹாக்கி மட்டைக்கு இணையான ஒரு காக்கி சட்டையாக நின்று கம்பீரத்தை வரவழைக்கிற விஷால், வெறும் விஷால் அல்ல. வீரத்தின் விஷுவல்!


 

வரிசையாக அமைச்சர்களை போட்டுத்தள்ளும் ஒருவனை தேடிக் கொண்டிருக்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர் விஷால். அவனை நெருங்கி பிடிக்கும்போதுதான் அதிர்ச்சி. கொலையாளி முன்னாள் காவல் துறை அதிகாரி! அதுமட்டுமல்ல, விஷாலின் ரோல் மாடலும் கூட! 'சட்டம் தண்டிக்கணும். சாமிதான் கண்ண குத்தணும்' என்று விஷாலுக்கு சொல்லிக் கொடுத்த அதே அதிகாரி, இப்போது கொலைகாரன். சட்டத்தால் எதுவுமே செய்ய முடியாது என்று அவரும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று விஷாலும் மோதிக் கொள்கிறார்கள். யார் நம்பிக்கைக்கு வெற்றி? முதுகில் கத்திக்குத்து வாங்கிக் கொண்டு, முன்னூறு பேரை முழங்கையாலேயே முர்ச்சையாக்கி, முச்சிரைக்க டயலாக் பேசி, இறுதியில் தனது நம்பிக்கைக்கு உயிர் கொடுக்கிறார் விஷால்.

அதிகப்படியான எக்சர்சைஸ், விஷாலின் முகத்தில் சில கிலோ கிராம்களை ஸ்வாகா செய்துவிட்டது. சண்டைக்காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டரே அஞ்சுகிற அளவுக்கு பாய்ந்திருக்கிறார். குறிப்பாக அந்த கார் சேஸ். மற்றும் ஐஸ் பேக்டரி பைட். எல்லாம் சரி... க்ளைமாக்சில் இரட்டை துப்பாக்கிகளோடு முழங்கும் விஷாலை பார்க்கும்போது பரிதாபமே மிஞ்சுகிறது.


 

ஒரே அபார்ட்மென்ட்டில் குடியிருக்கும் டி.வி நிருபர் நயன்தாராவுக்கும் விஷாலுக்கும் காதல் வருவது இன்னொரு பகுதி. இதில் அங்கே வசிக்கும் வாண்டு குழந்தைகளுடன் மோதி, நயன்தாரா வாங்கிக் கட்டிக் கொள்வதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். ரிசல்ட் என்னவோ, சோகம்! பாடல் காட்சிகளில் இவர் காட்டியிருக்கும் தாராளம், கண் கொள்ளா காட்சி. சில காட்சிகளே வந்தாலும், உபேந்திராவின் நடிப்பு 70 எம்.எம் எரிமலை! தனக்கு ஜாமீன் கொடுக்கிற நீதிபதியிடம் நிபந்தனை ஜாமீன் பற்றி முழங்குகிறாரே, சுடுகிறது தியேட்டர். அந்த ஜாமீனையும் மறுத்துவிட்டு தன்னை உள்ளே போட்டு விசாரணை செய்ய சொல்வது திடுக் திருப்பம்.


 

ரவிகாலே, பிரபுநேபால் வில்லத்தனங்கள் பார்த்து, புளித்து, வெறுத்துப் போன விஷயங்கள். முதலமைச்சர் ஆவதற்கு பிளான் போடும் கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல் அப்ளாஸ்களை அள்ளிக் கொள்கிறார். ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு, பிரேம்ஜி மாதிரி நடிகர்களை வீட்டிலேயே உட்கார வைத்து பென்ஷன் கொடுக்க முயற்சி செய்யலாம்.

"போலீஸ்ங்கிறவன் சுடுகாட்டிலே எரியுற பிணம் மாதிரி. விறைச்சு எழுத்தாலும், அடிச்சு படுக்க வச்சிடுவாங்க", "எங்கேயோ தொலைஞ்சு போயிடுச்சுன்னு சொல்றதுக்கு நான் அம்பது, நூறு இல்ல" இப்படி வசனங்களில் வண்ணக்கோலம் போட்டிருக்கிறார் குணசேகரன். டைட்டிலில் இவருக்கு தனி கார்டே போட்டிருக்கலாம்.

பின்னணி இசையை விடுங்கள், முன்னணி இசைக்கே முக்கியிருக்கிறார் ஹாரிஸ். சில பாடல்கள் (மட்டும்) அருமை. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு பிரமிப்பு. கத்தரி போட வேண்டிய இடங்களை கண்டுகொள்ளாத எடிடடர் ஆன்டனிக்கு ஒரு குட்டு. ஸ்டன்ட் சிவா ஃபைட்டில், யதார்த்தம் மிஸ்சிங்.

மார்கழி மாதத்து கோலங்கள் மாதிரி அங்கங்கே பிரமிப்பை தெளித்த இயக்குனர் ஏ.ராஜசேகர், சில இடங்களை அலங்கோலமாக்கியிருப்பது ஷாக்! சத்யமேவ ஜெயதே!

<<முற்செல்ல