திரைவிமர்சனம்

 

கண்ணும் கண்ணும்

காதலித்தவனே அண்ணன் ஸ்தானத்திற்கு வந்தால் காதல் என்னாகும்? ரெகுலர் தயாரிப்பாளர்கள் என்றால் கேட்ட மாத்திரத்திலேயே அபார்ஷன் பண்ணியிருப்பார்கள் இந்த கதையை. துணிச்சலாக திரைக்கு கொண்டு வந்திருக்கும் இவர்களுக்கு முதல் சபாஷ்.சென்னையிலிருக்கும் பிரசன்னாவுக்கும், குற்றாலத்தில் வசிக்கும் உதயதாராவுக்கும் கடித தொடர்பு ஏற்படுகிறது. (எப்படி என்பதை திரையில் காண்க) புனைப்பெயரில் கடிதம் எழுதிக்கொள்ளும் இருவருக்குமிடையில் காதலும் வருகிறது. திடீரென்று கடிதப் போக்குவரத்து நின்று போக, காதலியை தேடி குற்றாலம் வரும் பிரசன்னா நண்பன் வீட்டில் தங்குகிறார். நண்பனின் கடைசி தங்கையான உதயதாராதான் அவரது காதலி என்பது தெரியாமல் கதை நகர, டூர் போயிருக்கும் உதயதாரா திரும்பி வரும்போது விபத்தில் இறந்து போயிருக்கிறான் அண்ணன்.


விபத்துக்கு காரணமாக இருந்த பிரசன்னா, குற்ற உணர்ச்சியில் அந்த குடும்பத்தை தனது குடும்பமாகவே நினைக்கிறார். மற்ற தங்கச்சிகளையும் தனது தங்கைகளாகவே நினைக்க, விலகிப் போகும் கடைசி தங்கச்சிதான் தன் காதலி என்பது தெரியவருகிறது. பிறகென்ன? விருந்தாளிகள் நிறைந்த வீட்டின் வெள்ளாடு மாதிரி முழியாய் முழிக்கிறது காதல். எப்போது கத்தியிறங்குமோ என்ற கவலை நம்மையும் பிடித்தாட்டுகிறது. சந்தர்ப சூழ்நிலைகள் அதிகாரபூர்வ அண்ணனாகவே பிரசன்னாவை ஆக்கிவிட, கடைசியில் அவர் அர்ப்பணிப்பது காதலையா? ஒட்டிக் கொண்ட உறவையா? உலுக்கிப் போடுகிறது முடிவு. பிரசன்னா குற்றாலத்திற்கு வருகிற வரைக்கும், இவருக்கும் நயன்தாராவுக்குமான கடித போக்குவரத்தில் தந்தி போல் வேகம். தனியாகவே வாழ்ந்து பழகிய பிரசன்னா, நண்பனின் தங்கைகள் அண்ணா என்று அழைக்கக் கூடாதா என்று ஏங்குகிறார். நண்பனின் மரணத்திற்கு பிறகு, அத்தனை தங்கைகளையும் கரை சேர்க்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு நம்ம வீட்டு பிள்ளையாகிறார். தங்கச்சிகளுக்கெல்லாம் பச்சை புடவை வாங்கிக் கொடுக்க வேண்டிய சூழல் வரும்போது, உதயதாராவிடம் கொடுக்க முடியாமல் தவிக்கிறார். அதுகூட பரவாயில்லை. நண்பனின் அப்பாவுக்கு தானே கொள்ளி போட்டு கடைசி வாய்ப்பையும் இழந்து தவிக்கும்போது ஒட்டுமொத்த பரிதாபத்தையும் அள்ளிக் கொண்டு போகிறார்.

ரசிகர்களின் இதய தாரா ஆகிவிட்டார் உதயதாரா. பேச வேண்டிய எல்லாவற்றையும் அவரது கண்களே பேசி விடுகின்றன. அண்ணனின் மரணத்தை எதிர்கொள்ளும் எல்லா தங்கச்சிகளை போலவும் அலறி துடிப்பது பயங்கரம். காதலை இழக்க துணியாத தனது பிடிவாதத்தை கடைசி வரை தொடர்வது டச். தன் வீட்டிலிருப்பது தனது காதலன்தான் என்பதை தெரிந்து கொண்டதும், அவர் பார்க்கிற ஒவ்வொரு பார்வையிலும் பரிதாபம் கரைபுரண்டு ஓடுகிறது.

அவ்வப்போது வேகம் சரியும்போது சரியாக என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு. போலீஸ் வந்து கேட்கும். ஆனால் சொல்லிடாதே என்று கூறிவிட்டு தப்பித்து போய்விடும் போண்டா மணிக்காக இவர் அடிவாங்கி அழுவது வெடிச்சிரிப்பு. அதுமட்டுமா? கிணற்றை காணவில்லை என்று புகார் கொடுக்க போவதும் அதே ரக வெடிதான்

உதயதாரா தவிர மற்ற தங்கச்சிகளுக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர். எல்லா தங்கச்சிகளும் பிடித்த கச்சியாகவே இருக்கிறார்கள். இதில் ஒருவருக்கு ஜோடி நம்ம சந்தானம். அடக்கி வாசித்திருக்கிறார்.

இசை தினா. வைரமுத்துவின் அற்புதமான வரிகளுக்கு உயிரை டச் பண்ணுகிற மாதிரி ட்யூன் போட்டிருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் விஜயகுமார், கல்லூரி பேராசிரியரான ராஜேஷ் இவர்களும் கூட மனசை கொள்ளையடித்திருக்கிறார்கள். கொஞ்சம் அகத்தியன், நிறைய விக்ரமன் என்று தனது ஸ்டைலுக்கு முன்னோடிகள் வைத்திருக்கிறார் புது இயக்குனர் மாரிமுத்து. இனிவரும் இயக்குனர்களுக்கும் மாதிரி முத்தாக இருப்பார்.

நீண்ட நாட்களாக பெட்டிக்குள் கிடக்கும் படத்தை எடுத்து தட்டினால் தூசுதான் வரும். இந்த படத்திற்கு காசு வரும் போலிருக்கிறது.