திரைவிமர்சனம்

 

இன்பா

வெள்ளிக்கிழமை சந்தைக்கு போனவன் வெறுங்கையோடு திரும்பிய மாதிரி, தாடியும், மீசையுமாக என்ட்ரி கொடுக்கும் ஷாம், என்னென்னவோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால், “யாரை கேட்டுகிட்டு எதிர்பார்த்தே?” என்கிறார் அதே ஷாம்!


ஆனாலும் குருவி தலையில் அருவி விழுந்த மாதிரி ஆனந்தப்பட வைக்கிறார் சினேகா. இத்தனை வருட தவத்தை கலைத்திருக்கிறது இந்த கவர்ச்சி தேவதை.சிறு வயதில் ஜெயிலுக்கு போன ஷாமுக்கு திரும்பிய பின் கிடைக்கிற வேலைகளில் திருப்தி இல்லை. இந்த நிலையில் தனது தங்கை சினேகாவுக்கு பாடி-கார்டாக கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறார் அண்ணன் அருண்பாண்டியன். பிறகு? எண்ணெய் சட்டியில் பெட்ரோலை ஊற்றிய மாதிரி பொசுக்கென்று பற்றிக் கொள்கிறது காதல். விலகி விலகி போகும் ஷாமை விடாமல் துரத்துகிறார் சினேகா.

விஷயம் அண்ணனுக்கு தெரியவர, சில பல ரீல்களை சண்டை பிரியர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள். அதன்பிறகும் விடாமல் துரத்தும் சினேகா ஒருகட்டத்தில் மலையுச்சியிலிருந்து குதிக்கிறார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு போகும் இருவரும், குளுக்கோசுடன் கொஞ்சம் காதலையும் மிக்ஸ் பண்ணிக் கொள்கிறார்கள். அதன்பின் தைரியமாக சினேகாவை இழுத்துக் கொண்டு ஓடும் ஷாம், போலீஸ் அதிகாரியின் வஞ்சக வலையில் சிக்கி மறுபடியும் ஜெயிலுக்கு போக, தனித்துவிடப்படும் சினேகாவுக்கு தாலிகட்ட வருகிறார் போலீஸ் அதிகாரியின் தம்பி. கடைசியில் காதலர்கள் இணைந்துவிடுவார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

சஹாரா பாலைவனத்தில் சர்பத் கிடைத்தது போல் இனிக்கிறார் சினேகா. கவர்ச்சி விஷயத்தில் இறுக்கமாக இருந்தவர், தனது கொள்கையை தளர்த்தியிருப்பது ஆறுதல். எப்போதுமே விரக்தியாக காணப்படுகிறார் ஷாம். காதல் வந்த பிறகும் அவர் அப்படியே இருப்பது ஷாக். ஆனால் பாடல் காட்சிகளில் மட்டும் ஊக்க மருந்து சாப்பிட்டவர் போல் உற்சாகம் காட்டியிருக்கிறார். பிழைத்தோம்!

வடிவேலு, விவேக்குகள் இல்லாத குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் அருண்பாண்டியன். ஏதோ பிரச்சனை இருக்கிறது அவரது குரலில்.

அந்த பிளாஷ்பேக் மட்டும் இனிய அதிர்ச்சி. தன் சக மாணவனை தந்திரமாக கவிழ்த்து பூஜ்யமாக்கிவிடும் பூர்ணிதா, அதற்கான காரணத்தை சொல்லும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர். இந்த ஜோடியின் கதையையே இன்னும் கொஞ்ச நேரம் நீட்டியிருந்தால், ஒரு புது மழையில் நனைந்த அனுபவம் கிடைத்திருக்கும்.

புதுமுக இசையமைப்பாளர் பாலாஜி அவ்வப்போது ஆட வைக்கிறார். அவ்வப்போது மூடவும் வைக்கிறார் காதுகளை!

சாவுக்கு உறுமி, சடங்குக்கு குலவை, ஷாமுக்கு இதுதான் போலிருக்கிறது! விதியை மாற்றவா முடியும்?