திரைவிமர்சனம்

 

அசோகா

நாட்டுப்பற்று வரும்போதெல்லாம் கோடம்பாக்கத்தில் தோன்றி ஒரு படத்தை எடுத்துவிட்டு போவது நடிகர் கம் இயக்குனர் பிரேமின் வழக்கம்.

மசாலாப்பட ரசிகர்களே அதிரும் வண்ணம் மாட்டு வண்டியில் சைரன் கட்டி வருவதெல்லாம் பிரேம் படத்தில் சகஜம்! ஆனால், இந்த அசோகா சற்று சீரியஸ் ரகம்..

பிரதமரை கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகளிடமிருந்து அவரை குத்துயிரும், கொலை உயிருமாக காப்பாற்றுகிறார் அவரின் பாதுகாப்பு அதிகாரியான பிரேம். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படும் பிரதமரை கொல்ல தொடர்ந்து முயற்சிக்கும் தீவிரவாதிகளுக்கும், பிரேமிற்கும் நடக்கும் போர், பிரதமரை கொல்ல நடக்கும் தந்திரங்கள் இவைதான் விறுவிறுப்பான முழு படமும். பாடல் காட்சிகள் இல்லாதது ஆறுதல்! ஆரம்ப காட்சியே அசத்தல். காரில் வரும் பிரதமரை வழிமறிக்கிற தீவிரவாதிகள் புல்லட் மழையை பொழிய, ஒன்றிரண்டு தோழர்களை காவு கொடுத்து, பிரதமரை தைரியமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்கும் பிரேமின் வீரம், பிரேம்மாதம்! ஒரு பாதுகாப்பு அதிகாரியின் அத்தனை அதிகாரங்களையும் எப்படி பயன்படுத்துகிறார் என்பதெல்லாம் படித்தவர்களே தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யங்கள்.

தேவைப்படும் போதெல்லாம் தன்னுடைய இதயத்துடிப்பை நிறுத்தி இயங்க செய்யும் அந்த வில்லன் கேரக்டர் ஆச்சர்யம். அதை லாஜிக்கோடு பொறுத்திக் கொள்கிற திரைக்கதைக்கும் ஒரு பலே! பிரதமர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு காரை நிறுத்துவது கூட எத்தனை கடினம் என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த காரின் மூலம் தப்பிக்கும் வில்லன் அத்தனை நேர கவனத்தையும் காற்றில் பறக்கவிடுவது லாஜிக் மீறல். இப்போதெல்லாம் கெட்டப் மாற்றுவது சாதாரண நடிகைகளுக்கே கைவந்த கலையாகிவிட்டது. முதல் காட்சியில் இளம் பழமாக விளங்கும் வில்லி, அடுத்த காட்சியில் இறுகி போன கிழமாக மாறுவது திகைக்க வைக்கும் திருப்பம்.

துணை பிரதமர் ஆனந்தராஜ், வில்லனிடம் இன்டர்நெட் மூலம் பேசி பிரதமரை கொல்ல திட்டமிடுவதெல்லாம் அநியாயம். இத்தனை பகிரங்கமாகவா நடக்கும் இது போன்ற விஷயங்கள்? காமெடி இல்லாத குறையை போக்கியிருக்கிறார் ரகுவரன். அவர் சீரியஸாக பேசும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் தியேட்டரில்.

போலீசுக்கும், மத்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் நடக்கும் பனிப்போரை மனதில் வைத்துக் கொண்டு, க்ளைமாக்சை முடிவு செய்திருக்கும் பிரேமின் புத்திசாலித்தனத்தை மெச்சலாம்!

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், ஒரு வீர வணக்கமே போட்டிருக்கலாம்!