திரைவிமர்சனம்

 

வள்ளுவன் வாசுகி

காதலை வெறுக்கும் கிராமத்தில் தவிக்கும் ஒரு காதல் ஜோடி கதை.ஊர் தலைவர் பொன்வண்ணனும் ஆடு, மாடு மேய்க்கும் ரஞ்சித்தும் நண்பர்கள்.


பொன்வண்ணன் தங்கை காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்ய கொதிப்பாகிறார். இனி மேல் இந்த ஊருக்குள் காதலர்களே உருவாக கூடாது என்று சட்டம் போடுகிறார்.

ரஞ்சித்தின் மகள் சுவேதா. பாசத்தை ஊட்டி வளர்க்கிறார். சுவேதாவுக்கும் அவ்வூருக்கு வாட்டர் டேங்க் ஆபரேட்டராக வரும் சத்யாவுக்கும் காதல் மலர்கிறது. ஊராருக்கு தெரியாமல் காதலை வளர்க்கின்றனர்.

ஒரு கட்டத்தில் காதல் ஜோடி நெருக்கமாக இருப்பதை பொன்வண்ணனும், ரஞ்சித்தும் நேரில் பார்த்து விடுகின்றனர். ரஞ்சித் நொறுங்குகிறார். பஞ்சாயத்தார் கூடி காதலனுக்கு அபராதம் விதித்து ஊரை விட்டு விரட்டுகின்றனர். மகளுக்கு மாப்பிள்ளை தேடுகிறார் ரஞ்சித்.பெண் பார்க்க வரும் வரன்கள் காதல் விஷயம் தெரிந்து திரும்புகின்றனர். மகளை கட்டி கொடுக்க முடியாமல் தவிக்கும் ரஞ்சித் அதற்கு காரணமான சத்யாவை தீர்த்து கட்ட கொலை வெறியோடு செல்கிறார். அதன் பிறகு எதிர்பாராத திருப்பங்கள்...

ரஞ்சித் பாசம் உள்ள தந்தையாக மனதில் நிற்கிறார். பிரசவத்தில் மனைவியை இழந்து குழந்தையை மார்பில் தோளில் சுமந்து வளர்ப்பது... பள்ளிக்கூடத்தில் வாத்தியார் அடித்ததற்காக படிப்பையே நிறுத்துவது... மகளை பெரிய இடத்தில் கட்டி கொடுக்க மாடுகள் மேய்ப்பதோடு சிறு வேலைகள் செய்து பணம் சேர்ப்பது.... இவர் போல் தந்தைமார் இருக்க வேண்டும் என ஏங்க வைக்கும் பாத்திரம்.

மகளை காதலனுடன் பார்த்து இடிந்து போய் தடுமாறி விழுவது... மகளுக்கு பார்க்கும் வரன்கள் தடைபட்டு போக தவிப்பது... என படம் முழுக்க பாசக்கார தந்தையாக வெளுத்துள்ளார்.நாயகன் சத்யா காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகத்தில் கச்சிதம்.... கிளைமாக்சில் அவர் பேசும் வசனங்கள் வலுவின்றி தெளிக்கின்றன. நாயகி சுவேதா அழகாய் பளிச்சிடுகிறார். காதல் வயப்படும் சீன்கள் கவிதை...கல்யாணம் என்ற காமெடி கேரக்டரில் சிரிக்க வைப்பதுடன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மறுமலர்ச்சி கே.பாரதி. தந்தை மகள் பாசத்தில் காதலை புகுத்தி குடும்ப உறவுகள் கலாசார பின்னணியுடன் கிராமிய மனத்தோடு திரைக்கதையை நகர்த்தி சிலிக்க வைக்கிறார்.

ஊர் தலைவராக வரும் பொன்வண்ணன், அவர் மனைவி குயிலி ரஞ்சித் மனைவியாக வரும் சீதா, தாயாக வரும் வடிவுக்கரசி பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. சத்யா தாய் இறுதி ஊர்வலத்தை பார்க்கும் ரஞ்சித் பிணம் எரியும்போது அவரை வெட்டிக் கொல்ல துணிவது அழுத்தமாக அமையவில்லை.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஊர் உறங்க ஊராரும் உறங்க பாடல் இதயத்தை வருடுகிறது.

கவித்துவமான குடும்ப உறவுகள் மேல் கட்டிய காதல்...