திரைவிமர்சனம்

 

தங்கம்

பழகிப்போன பாசமலர் கதைதான். தங்கச்சிக்காக ஜெயிலுக்கு போகும் அண்ணன் திரும்பி வந்து பார்த்தால், தங்கச்சியே இல்லை. அவளுடைய சாவுக்கு காரணமான வில்லனை போட்டுத்தள்ளுகிற பாசக்கார அண்ணன் சத்யராஜ், மீதி நேரங்களில் கவுண்டரோடு அடிக்கும் நக்கல், நையாண்டிகள்...மேகா நாயரோடு ஆடும் டூயட்டுகள்...இவைதான் இரண்டரை மணிநேர தங்கம்!

விட்டால் தங்கச்சிக்காக ஒரு தனிக்கட்சியே ஆரம்பிக்கிற அளவுக்கு பாசம் செலுத்துகிறார் சத்யராஜ். கல்லூரி போவதற்காக ஒரு பஸ்சே வாங்கி கொடுக்கிறார். அதில் அந்த தங்கச்சி மட்டும் செல்வாராம்?! இப்படியெல்லாம் பாசத்தை கொட்டி வளர்க்கப்படுகிற தங்கச்சி, தன்னை ஒருவன் கற்பழித்த விஷயத்தை வாந்தியெடுக்கும் வரை சொல்லாமல் விடுவதை எதில் சேர்ப்பது? அப்படியிருந்தும் பொறுத்துக் கொள்கிற சத்யராஜ் அவனுக்கே தங்கச்சியை கட்டிக் கொடுக்கிறார். கிளியை வளர்த்து கிளி ஜோசியனிடம் கொடுத்த கதையாக அமைகிற இந்த தடுமாற்றம் ஒரு கொலையில் முடிய, பழியை தானே ஏற்றுக் கொண்டு சிறைக்கு போகிறார் சத்யராஜ். பிளாஷ்பேக்கில் அமைந்திருக்கும் இந்த எபிசோடில் கவுண்டரின் கலக்கல்தான் நம்மை காப்பாற்றுகிறது.

'ஏம்பா, விலக சொன்னா அவங்க விலகமாட்டாங்களா?' 'எதுக்கு அந்தரத்திலே இருந்து குதிக்கிறே?' 'நீங்கள்ளாம் வேல் படத்திலே நடிச்சவங்களா? அந்த படத்திலேதான் இப்படி அரிவாளோட குறுக்கும் நெடுக்கும் போவாங்க!' இப்படி தமிழ்சினிமாவில் ஹீரோக்களின் பில்டப்பை கிழித்து தொங்க போடுகிறார் கவுண்டர். 'இந்தா.. இந்த துண்டை நீ ஆரம்பிக்கிற கட்சிக்கு கொடியா வச்சுக்க' என்று தோளில் கிடக்கிற துண்டை அவிழ்த்து சத்யராஜ் மேலே எறிந்துவிட்டு போவதெல்லாம், அவருக்கே உரிய நையாண்டி. யானை படுத்தாலும் குதிரை உயரத்திற்கு இருக்குமாம்! கவுண்டருக்காக சொல்லப்பட்ட பொன்மொழியோ?

தனக்கு இணையாக இன்னொருவரை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிற பெருந்தன்மையெல்லாம் சத்யராஜுக்குதான் வரும். தங்கச்சி கல்யாணத்தில் கவுண்டரின் ரோல் என்ன என்பதையும், தங்கச்சி யாரையோ லவ் பண்ணுதுப்பா என்று ஆரம்பித்து ஷாருக்கான் போட்டோவை காண்பித்து கவுண்டரை கவிழ்ப்பதும், சத்யராஜுக்கு மட்டுமே கைவந்த கலை.சந்தையில் அறிமுகமாகி, சத்யராஜை லபக் செய்துவிடும் மேகா நாயர், அவர் ஜெயிலுக்கு போய் வரும் வரை முதலிரவு கொள்ளாமல் இருப்பது பரிதாபம். மீண்டும் சேரப் போகும்போது மாமனாரின் மரணம்! பரிதாபம். தங்கச்சியாக நடித்திருக்கும் ஜெயஸ்ரீக்கு தங்கச்சிகளுக்கேயுரிய அழகிய புன்னகை. நடிப்பும், குரலும் மனசை விட்டு அகலாது.

சண்முகராஜா, மகாதேவன், பாலாசிங் இவர்கள் எல்லாம் வில்லன்கள். இவர்களின் நடிப்பிலும், நடவடிக்கைகளிலும் என்றும் மாறாத பழமை. ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒன்றிரண்டு பாடல்கள் முணுமுணுக்கலாம்.

ஜி.கிச்சா இயக்கியிருக்கிறார். நல்லவேளை கவுண்டரை கொண்டு கிச்சு கிச்சு மூட்டினார். இல்லையென்றால் தங்கம் பித்தளையாக பல்லை காட்டியிருக்கும்!