திரைவிமர்சனம்

 

வெள்ளித்திரை

நடிகையுடன் நடிகர் காதல், உதவி இயக்குனரை மணந்த நடிகை, வெற்றி பெறும் படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடரும் மூன்றாமவர், தினச்செய்திகளில் பரபரப்பாக்கப்படும் சினிமாவுக்குள் நடக்கும் இப்படியான நிஜங்களை பதிவு செய்திருக்கும் படம் இது.

நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்ற 'கொள்கையுடன்' கம்பெனிப் கம்பெனியாக அலையும் பிரகாஷ்ராஜ். என்றாவது ஒருநாள் இயக்குனராகிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் உதவி இயக்குனர் ப்ருத்விராஜ். தனது கனவு நனவாக எந்த வழியும் கிடைக்காத பிரகாஷ்ராஜ், குறுக்குவழியை தேடுகிறார்.

அதன்படி ப்ருத்விராஜின் கதையை திருடி நாயகன் வாய்ப்பை பெறும் பிரகாஷ்ராஜ் பெரிய நடிகனாகிறார். தன் முன்னேற்றத்தின் ஆதாரமாக இருந்த கதையை இழக்கும் ப்ருத்வியின் எதிர்காலம் கேள்விகுறியாகிறது. ஒரு காலத்தில் தன்னிடம் வாய்ப்பு கேட்ட பிரகாஷ்ராஜிடம் வாய்ப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்படும் ப்ருத்விராஜ், எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் அடுத்தடுத்து.சினிமாவுக்குள் நடக்கும் உள்விவகாரங்கள் தெரியாத ரசிகர்களுக்கும் புரியும்படியான திரைக்கதை தெளிவும் நேர்த்தியும் வெள்ளித்திரையை தங்கத்தின் மதிப்புக்கு உயர்த்தியுள்ளது.

கிடைக்கும் கேப்பில் கெடா வெட்டும் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் ரகளை பண்ணியிருக்கிறார். நடிகனான அடுத்த நொடியே பெயரை மாற்றிகொண்டு பண்ணும் அலப்பரைகள்,  டி.வி பேட்டியில் பொய் சொட்ட சொட்ட சுயசரிதை ரீல் ஓட்டுவது என பிண்ணியெடுக்கிறார்.

நடிகையின் கணவன் என்ற சிலுவையின் சுமை, தனது சொந்த திறமைகளை நசுக்குவதை அறிந்து மனம் வெதும்பும் இடத்தில் கொஞ்சமும் செயற்கை தனமில்லாத நடிப்பில் ப்ருதிவி மிளிர்கிறார். என்னதான் புகழ்பெற்ற நடிகையாக இருந்தாலும் பணத்தாசை பிடித்த அண்ணனிடம் சூழ்நிலை கைதியாக சிக்கி தவிக்கும் கோபிகாவும் பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.பிரகாஷ்ராஜின் கால்ஷீட் மேனேஜராக M.S. பாஸ்கர், உதவி இயக்குனராக வரும் சார்லி ஆகியோர் மாறி மாறி மோதிக்கொண்டு தியேட்டரை சிவகாசி எஃபக்டுக்கு மாற்றுகின்றனர்.

இயக்குனர் விஜியின் வசனங்கள் கதைக்கு மேலும் அழுத்தம் சேர்க்கிறது. 'சேர்ந்த வாழ்வது மட்டுமல்ல, பிரிந்து அழுவதும் காதல்தான்', 'வாழ்க்கையோடு போராடலாம்; வறுமையோடு போராட முடியாது' போன்ற வசனங்கள் சாம்பிளுக்கு.

ஜி.வி. பிரகாஷின் இசையில் 'கஞ்சி பானை மேல இஞ்சி ஊறுகாய் போல' பாடல் குத்தாட்ட ப்ரியர்களுக்கு சூப்பர் விருந்து. பின்னணி இசையில் சுந்தர் .சி பாபுவும் சிறப்பு சேர்க்கிறார்.

'வெள்ளித்திரை' ஓடவேண்டும் நூறுநாள் வரை.