திரைவிமர்சனம்

 

மிருகம்

அறிமுகம் ஆதி, பத்மபிரியா, பானுசந்தர், கஞ்சா கருப்பு, சோனா, கார்த்திகேயன் நடிப்பில் ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவில் சபேஷ் முரளியின் இசையில் சாமி இயக்கியுள்ள படம். தயாரிப்பு கார்த்திக் ஜெய் மூவிஸ் (பி) லிட். பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கிறவன் ஐயனார். கொடூர காமுகன். தட்டிக் கேட்கிற ஆட்களையெல்லாம் எட்டி உதைத்து மிதிக்கிற முரடன். இவனைத் தட்டிக் கேட்க ஆளே இல்லையா... இவன் எப்போது ஒழிவான் என்று ஊரே வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிருகமாகத் திரிகிறான் ஐயனார்.

கெட்ட பழக்கங்கள் அனைத்தும் இவனுக்குச் சகவாசம். கெட்ட வார்த்தைகள் அவனுக்குச் சுவாசம். அவனுக்கும் ஒரு தாய் சோறு  போடுகிறாள். அவளுக்கும் அடி உதை உண்டு. அப்படிப்பட்டவன் வாழ்வில் நுழைகிறாள் அழகம்மா.

காமக் கண்ணோட்டத்தில்தான் அவனது கல்யாணத்துக்கு சம்மதிக்கிறான். அவளோ அவனை மனிதனாக மாற்ற முடிவெடுக்கிறாள். இருந்தாலும் காமவெறியன் திருந்தவில்லை. கண்ட இடங்களில் மேய்கிறான். அடி, உதை, போலிஸ், ஜெயில்...! போதை ஊசிப் பழக்கம். ஒரு கட்டத்தில் அவனுக்கு எய்ட்ஸ் வந்து விடுகிறது.

அடங்காத காளையாகத் திரிந்தவன் அடிமாடு நிலைக்கு இளைத்து உருக்குலைந்து தேய்ந்து போகிறான். இறுதியில் மாய்ந்து போகிறான். ஒரு மிருகம் எப்படி வீழ்கிறது என்பதுதான் கதையின் முடிவு

நாயகன் அறிமுகம் ஆதி. படத்தின் முற்பாதியில் அவர் செய்யும் கொடூரங்கள் காணச் சகிக்காதவை. நோய் வந்த பின் இளைத்து துரும்பாகி அப்பப்பா.... அசத்தலான நடிப்பு. அந்த மிருகமாக வாழ்ந்திருக்கிறார் ஆதி. ஒவ்வொரு காட்சியிலும் யதார்த்தம் பளிச்சிட ஐயனாராகவே அவதாரம் எடுத்திருக்கிறார்.

அழகம்மாவாக வரும் பத்மபிரியா பின்னியிருக்கிறார். பனைமரம் ஏறும் திமிரும் தன்னைச் சீண்டிவிட்டு ஓடும் ஒருவனை துரத்தி அரிவாளால் வெட்டும் துணிவும் என மிரட்டுகிறார். ஐயனாரை கோபத்தில் எட்டி உதைத்து அடிக்கும்போதும் நோயாளியான பின் ஐயனார் மீது கருணை காட்டும்போதும் நடிப்பின் உச்சங்களை தொட முயன்றிருக்கிறார் பத்மபிரியா.

படம் முழுக்க கருப்பா... என்று தன்னந்தனியே புலம்பித் திரியும் கஞ்சா கருப்பு, ஐயனாரின் கையாளாக வருகிறார். யதார்த்தமான பாத்திரம். சில நேரங்களில் ஐயனாரின் மன ஓட்டத்தை பார்வையாளருக்குப் புரிய வைக்கும் வேலையையும் செய்திருக்கிறார். அழுக்கான பாத்திரம். ஒளி வீசும் நடிப்பு.

ஐயனாரின் ஆத்தாவாக வரும் குரண்டிலட்சுமி அம்மாள் பண்பட்ட நடிப்பை காட்டியுள்ளது பளிச்.

பிரம்மாதமான நடிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்களம், படப்பிடிப்பு இடங்கள் என எல்லா வகையிலும் மிரட்டியிருக்கிறார்கள். சபேஷ் முரளியின் இசையில் நா. முத்துக்குமாரின் நன்கு கூர்பாய்ச்சப்பட்டுள்ள சொற்கள் வரிகளாய் மின்னுகின்றன.

படத்தில் இன்னொரு கதாநாயகன் போல விஸ்வரூபமெடுத்துள்ளது ராம்நாத் ஷெட்டியின் கேமரா. அப்பப்பா... அந்த கந்தக பூமியில் நம்மைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்.

இவ்வளவையும் சரியாய் ஒருங்கிணைத்து செயல்படுத்தியிருப்பதில் இயக்குநர் சாமி வெற்றி பெற்றிருக்கிறார். படத்தில் ஆரம்பம் ஆபாசம், வன்முறை, வக்கிரம் என்று கடை விரித்தாலும் கடைசி அரை மணி நேரத்தில் மிரட்டி விடுகிறார் இயக்குநர். கண்டிப்பாக வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய படம்.