திரைவிமர்சனம்

 

அறை எண் 305-ல் கடவுள்

அண்ட சராசரங்களையும் ஆளுகிற கடவுள், திருவல்லிக்கேணி முட்டு சந்துகளில் சிக்கி சின்னாபின்னமாகிற கதை. "கருப்பையா மேன்ஷனுக்கு கடவுள் வருகிறார்" இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு க்ளைடாஸ்கோப்பே காட்டலாம்.


ஆனால் இவர்கள் காட்டியிருப்பது வெறும் பொம்மலாட்டம். கஞ்சா கருப்பு, சந்தானம் இருவருக்கும் வேலை தேடுகிற வேலை. மேன்ஷனிலிருந்து மெஸ் வரைக்கும் கடன் கடன் கடன்! நாளைக்கு பணத்தோடு வந்தால், மேன்ஷனில் இருக்கலாம். இல்லையேல் பெட்டி படுக்கையெல்லாம் ரோட்டில்தான். மொட்டை மாடியில் நின்று கொண்டு கதறுகிற இருவரும், "ஏ கடவுளே... ஒரு அப்பனுக்கு பொறந்தவன்னா நேரிலே வாடா" என்று கூக்குரல் எழுப்ப, வந்தே விடுகிறார் கடவுள்! அதன்பின் நடக்கிற ஆர்ப்பாட்டங்களும், கூத்துகளும்தான் முழு படமும்.

பணம் மட்டும் தரமாட்டேன். கடவுள் போடுகிற முதல் கண்டிஷன் இது. சந்தானம், கருப்புடன் அவர்கள் போகிற இடத்துக்கெல்லாம் போகிறார். பேசவே மாட்டாளா என்று ஏங்குகிற சந்தானத்தை அவரது காதலியோடு டுயட்டே பாட வைக்கிறார். சொடக்கு போடுகிற நேரத்தில் ஒரு பிரமாண்ட பஃபே விருந்தே நடத்துகிற கடவுள், உருப்படியாக ஒன்றுமே செய்யாததால் கடவுளிடம் இருக்கும் அந்த அதிசய கருவியை லபக்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள் இருவரும். (அந்த கருவி இல்லையென்றால் கடவுளே பேட்டரியில்லாத டார்ச்தானாம்) பிறகு? இவரே ரோட்டில் கடலை விற்று பிழைக்கிற நிலை...

கடவுளாக நடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த முகத்தில் அத்தனை சாந்தம். தன் பெயரால் நடக்கிற கொடுரங்களை கண்டு பதறுவதும், நாத்திகரான ராஜேஷிடம் கடவுள் பற்றி நீண்ட விளக்கம் கொடுப்பதும் அழகு. கடவுள் பேசுகிற வசனங்கள் ஏனோ தானோ ரகம் இல்லை. அறிவுபூர்வமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எழுதப்பட்டிருப்பது ஆறுதல்.

உலகத்திலேயே ரோஜா பூவை வாடகைக்கு எடுக்கிற ஒரே நபராக சந்தானம். 'காபிடே' -ல் வேலைக்கு போய், முதலாளியிடம் அவமானப்பட்டு, பிறகு நேரம் வரும்போது அதை 'கையேந்தி டே' ஆக்கிவிட்டு போவதெல்லாம் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு. இனடர்வியூவில் தன்னை நரி என்று வர்ணித்துக் கொண்ட முதலாளியை பிற்பாடு நரியாகவே கூண்டில் அடைக்கிற அவரது விளையாட்டுத்தனமும் பயங்கர ஜோக்.

கஞ்சா கருப்பு மேடையில் முழங்கிக் கொண்டிருக்க, பக்கெட்டுடன் உள்ளே வந்து "நீ குளிக்க போடா" என்கிறாரே சந்தானம்... கனவையும், நிஜத்தையும் முடிச்சு போடும் அந்த காட்சி அற்புதமான கற்பனை. கருப்புக்கு குருவம்மா என்ற சுமாரான ஃபிகரே ஜோடி. அடக்கடவுளே.

பிரகாஷ்ராஜை ஒரு தலையாக காதலிக்கும் ஜோதிர்மயி, ஒரு டுயட்டிற்கு உதவியிருக்கிறார். மதுமிதா க்ளைமாக்சில் கொடுக்கிற ஷாக், படத்திற்கே போஷாக்! இல்லையென்றால் அந்த கருவியை அத்தனை சுலபமாக தூக்கி எறிவாரா சந்தானம்?

மறுபடியும் மேன்ஷன் வாலிபர்கள் அழைக்க, பூலோகத்திற்கு திரும்பும் கடவுள், தனது விசேஷ கருவிக்கு அத்தனை பூட்டுகள் போட்டிருப்பது வெடிச்சிரிப்பு.

வித்யாசாகரின் இசையில் நான்கு பாடல்கள் இருந்தாலும், எவர் கிரீன் குறையொன்றுமில்லை...தான். சென்ட் மாதிரி உபயோகிக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகளும் அற்புதம். சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவு பளிச்.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், கடவுளுக்கு கோவிலே கட்டியிருக்கலாம்.

<<முற்செல்ல