திரைவிமர்சனம்

 

காத்தவராயன்

குவார்ட்டர் கோவிந்தன்களுக்காக 'சரக்கு' தயாரிக்கும் ஒருவனின் கதை. சாராய நெடியை விட பிரச்சார நெடி கொஞ்சம் ஓவர்! கம்பீரமாக ருசிக்க வேண்டிய சரக்குதான்! பட்...? சாராயத்தை ஒரு சொட்டு நாக்கில் வைத்தே கலப்படம் கண்டு பிடிக்கும் கரண், அந்த ஏரியாவையே தனது உசத்தி சரக்கால் கவர்ந்து வைத்திருக்கிறார். அதே ஏரியாவில் அதே தொழில் செய்ய வரும் தண்டபாணி, தடையாக இருக்கிற கரணை போட்டுத்தள்ள முயல்கிறார். இதற்கிடையில் போதைக்கு எதிராக பிரச்சாரம் செய்ய சென்னையிலிருந்து வரும் கல்லூரி மாணவி விதிஷாவுக்கும், கரணுக்கும் இடையே காதலா? மோதலா? என்பதே தெரியாத ஒரு 'இது!' ஒருகட்டத்தில் சல்யூட் அடித்த போலீசே, கரணை ஜெயிலில் தள்ளுகிறது. தனது சிறை வாழ்க்கைக்கு காரணம் விதிஷாதான் என்ற கோபத்தில் அவரை தேடி சென்னைக்கு வரும் கரண், வேறு மாதிரி விதிஷாவை பார்க்கிறார். தன்னை ஜெயிலுக்கு அனுப்பியவளை, தானே ஜெயிலில் இருந்து வெளியேற்ற வேண்டிய பெரும் பொறுப்பை சுமக்கிறார். தமிழ்சினிமா காலம் காலமாக எழுதி வைத்த விதிகளை மாற்றாமல் ஒரு க்ளைமாக்ஸ்!


பாலிஷ் போட்ட தக்காளி மாதிரி இருக்கிறார் கரண். தொழில் கள்ளசாராயம் என்பதால், கொஞ்சம் மெனக்கட்டாவது மேக்கப்பை தவிர்த்திருக்கலாம். சாலையில் வாகன போக்குவரத்தை மறித்து, "போதையில் ரோட்டை கடக்கிறவன் எல்லாம் குழந்தைங்க மாதிரி" என்று அராஜக லெக்சர் அடிப்பது சுவாரஸ்யம். பழிவாங்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வரும் கரண், விதிஷாவுக்காக போராடுவதும், போதை பொருள் ஆசாமிகளை போட்டுத் தள்ளுவதும் சண்டை பிரியர்களுக்கு பிரியாணி விருந்து. புதுமுகம் விதிஷாவுக்கு முதல் படத்திலேயே நடிப்பை கொட்ட வேண்டிய கட்டாயம். அதை குறைவில்லாமல் செய்திருக்கிறார். "நீ சாராயம் காய்ச்சுறதை விட்டுட்டா நான் உன்னை கட்டிக்கிறேன்" என்று கரணிடம் அவர் சொல்வது இரண்டு டூயட்டுகளுக்கு பயன்பட்டிருக்கிறது.

திடீரென்று கிடைத்த 3 லட்சத்தை வைத்துக் கொண்டு வட்டிக்கு விடும் வடிவேலு, திரும்புகிற இடத்திலெல்லாம் தர்ம அடி வாங்குவது அவரது ரெகுலர் ஸ்டைல் என்றாலும் வெடிச்சிரிப்புக்கு குறைவில்லை. அதிலும், அவரை அடிக்க அவரிடமே பணம் வாங்குகிற டெக்னிக் பலே காமெடி.

சுந்தரா டிராவல்ஸ் ராதாவும் நடித்திருக்கிறார். கரணை ஒருதலையாக காதலிக்கிற வேடம். அதற்காக எப்போது பார்த்தாலும் 'ம்ம்ம், ஆங்ங்ங்' என்று முக்கல், முனகல் எஃபெக்டிலேயே வலம் வருவது பயங்கரம்ம்ம்ம்ப்பா! விருந்திலிருந்து எழுந்து போன கரண், நாட்டை விட்டே ஓடிப்போனது போல நினைத்து இவர் கூவி கதறுவதெல்லாம் ரொம்ப ஓவர் சாமி.

கார்த்திக்ராஜாவின் ஒளிப்பதிவு கண்களுக்கும் மனசுக்கும் பெரும் விருந்து. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் 'காத்தவராயா என்னை' என்ற ஒரு பாடல் கேட்கலாம்.

நாட்டில் விவாதிக்கப்படும் முக்கியமான பிரச்சனையை சொல்ல வந்த ஒரே காரணத்திற்காக புது இயக்குனர் சலங்கை துரையை பாராட்டலாம். மற்றபடி, கம்பீரம் தொலைத்த காத்தவராயன்தான்!

<<முற்செல்ல