திரைவிமர்சனம்

 

யாரடி நீ மோகினி

காஃபி பிரியர்கள், கம்மங்கூல் மனிதர்கள் என ரசனையில் இடைவெளி உள்ள இரு தரப்பினரையும் திருப்திபடுத்தும் முயற்சிக்காக கைதட்டலாம் ஜோராக.

வேலை தேடும் பெயரில் வீண் பெழுது கழிக்கும் தனுஷின் விழிகளில் விழுகிறார் நயன்தாரா. நயன்தாரா வேலை பார்க்கும் சாப்ட்வேர் கம்பெனியிலேயே எப்படியாவது வேலைக்கு சேர நினைக்கும் தனுஷின் லட்சியம் நிறைவேற நயன்தாராவின் அழகு காரணமாக இருக்கிறது.


 

நினைத்தபடி வேலையும் கிடைக்க, மனசுக்குள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் ஐ லவ் யூ மந்திரத்தை நயனிடம் உளறி கொட்டுகிறார் தனுஷ். தனுஷின் காதலை ஒன்வேயில் திருப்பிவிடும் நயன்தாரா, மகனின் காதலுக்காக பரிந்துபேசும் ரகுவரனையும் திட்டி தீர்க்க மனமுடைந்து போகின்றனர் தந்தையும் மகனும்.இந்த கவலையில் ரகுவரன் காலமாக, தனிமை சுனாமியில் மூழ்குகிறது தனுஷின் நிலைமை. இப்படியே இருந்தால் பைத்தியமாகிவிடுவான் என நினைக்கும் நண்பன், தனுஷை தனது திருமணத்திற்காக சொந்த கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். ரெயில் ஏறும்போதுதான் தெரிகிறது நண்பனின் முறைப்பெண்தான் நயன்தாரா என்பது. பயணம் எப்படி செல்கிறது என்பது மீதிகதை.

சாப்ட்வேர் கம்பெனி, கம்யூட்டர் பாஷைகள் என முதல் பாதி அல்ட்ரா மாடர்னாக ஆரம்பித்தால் கூட்டுக்குடும்பம், கட்டுப்பாடு, கலாச்சாரம் என இரண்டாம் பாதி கதை 'வருஷம் 16' ஸ்டைலில் மனசை வருடுகிறது. ஆக ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த திருப்தி.


'கண்ணின் கடைப்பார்வை கண்ணியர்கள் காட்டிவிட்டால்
மண்ணின் மைந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம்'

என்ற வரிகள் தனுஷின் கதாபாத்திரத்திற்கு ரொம்பவே பொருந்துகிறது.


 

நேர்முகத் தேர்வில் பலரும் சரளமாக ஆங்கிலத்தில் பேச, யா, யா என்ற ஒரு வார்த்தையை ரிப்பீட் செய்து திருதிருவென விழிக்கும்போதே சராசரி நடுத்தரவர்கத்து ரெபிடெக்ஸ் இளைஞர்களை கண்முன்  நிறுத்துகிறார்.பாட்டி வைத்தியம் செய்தும் பிழைக்காமல் படுத்த படுக்கையாகும் பாட்டிக்கு வைத்தியம் செய்து காப்பாற்றும்போது நமக்கும் வருகிறது நாலு சொட்டு கண்ணீர். கண் விழிப்பதில் ஆரம்பித்து 'கக்கா' போவதுவரை உள்ள கிராமத்து முறைகளில் மாட்டிக்கொண்டு முழிப்பது கலகலப்பு.அப்பா இறந்த செய்தியை அதிர்ச்சியே இல்லாமல் சொல்லும் தனுஷ், ரகுவரனின் பழைய ஸ்கூட்டரை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைக்கும் காட்சியில் ஒப்பனையில்லாத நடிப்பு.

பஞ்சாயத்துக் கூட்டத்துக்குப் போனாலும் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வச்சிட்டுப் போனாலும் மாறாத மல்லிகைப் பூவின் வாசம் போலத்தான் நயன்தாராவின் கேரக்டரும். கம்யூட்டர் இன்ஜினியர், கிராமத்து பாவாடை தாவணி மங்கை என களம் மாறினாலும் நடிப்பில் பிரமாதப்படுத்துபவரிடம் எந்த கோணத்திலும் தேவதையின் சாயல்.

மகனுடனான பாசத்தில் கண்ணாமூச்சி விளையாடும் ரகுவரன் திடீரென இறந்துபோக, அவரது சமீபத்திய கடைசி நாட்கள் ஞாபகத்திற்கு வந்து மனது கனக்கவைக்கிறது.

இனக்கவர்ச்சியால் தனுஷை லவ்வும் நயன்தாராவின் தங்கையாக வரும் சரண்யா சில இடங்களில் நயன்தாராவிற்கு அக்காவாகிறார் நடிப்பில்.

தனுஷின் கான்ஸ்டபிள் நண்பரான கருணாஸ், போனில் காதல் தூதுவிடும் இடத்தில் எழும் வெடிசிரிப்பை நிறுத்த வெகு நேரமாகிறது. இன்னொரு நண்பனாக வரும் கார்த்திக், தாத்தா விஸ்வநாதன், பாட்டி சுகுமாரி உள்ளிட்டவர்களும் மனதில் பதிகிறார்கள்.

அவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் மணப்பெண்ணுக்கு அருகே மாப்பிள்ளாயின் நண்பனை அமரவைத்து அடிக்கும் லூட்டிகள் முழு லாஜிக்கையும் சோற்றில் மறைக்கும் முயற்சி.

யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் 'எங்கேயோ பார்த்த...', 'ஒரு நாளைக்குள்...', 'நெஞ்சை கசக்கி...', 'பெண்ணே என்னைக்கொடு...' பாடல்கள் தியேட்டரிலிருந்து திரும்பியவுடன் கேசட்டை தேடி கேட்க தூண்டுகிறது. அடடே பின்னணி இசை டி.இமானா. இனி டிமாண்ட் ஏற்படலாம். சித்தார்த்தின் ஒளிப்பதிவில் ஞானம்.

செல்வராகவனின் கதை, வசனம் புதிதல்ல என்றாலும் அவரது திரைக்கதையும், மித்ரன் ஆர்.ஜவகரின் இயக்கமும் கவனத்தை ஈர்க்கிறது.
'யாரடி நீ மோகினி' கொள்ளை அழகு.