திரைவிமர்சனம்

 

வாழ்த்துகள்

இன்னொரு 'காதலுக்கு மரியாதையை' தர முயன்றிருக்கிறார் சீமான். ஆனால் அவருக்குள் பீடித்திருக்கும் தமிழ்பித்து, இயக்குனருக்கான பொறுப்பிலிருந்து தடுமாற வைத்திருக்கிறது. தமிழ் வளர்ச்சியின் அக்கறையை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்தான். அதற்காக பழமையான திரைக்கதையை கொடுத்து, படம் பார்க்கும் ரசிகர்களை சோதனைக்கூட எலியாய் பதம் பார்ப்பது நியாயமில்லை. காப்பி (மன்னிக்கவும் தமிழில் சொல்வதென்றால் கொட்டை வடிநீர்) சாப்பிடகூட நேரமில்லாத அளவிற்கு பிஸியாக மென்பொருள் நிறுவனத்தை நடத்திவரும் மாதவன். வேளாண் கல்லூரி மாணவி பாவனா. பாவனாவின் குணம், அவரது குடும்பம் எல்லாமும் மாதவனுக்கு பிடித்துப்போக அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்.

தனது எண்ணத்தை பாவனாவிடம் தெரிவிக்கும் மாதவனின் நடவடிக்கையும் நாயகியின் மனசில் பதிய, காதல் வானில் சிறகடித்து பறக்கின்றனர். காதல் திருமணத்தில் உடன்பாடில்லாத பாவனாவின் தாத்தா இவர்களின் காதலுக்கு எதிர்ப்புகொடி காட்ட, மாதவன்-பாவனா ஒன்று சேர்கிறார்களா இல்லையா என்பது படத்தின் முடிவு. கதை புதிதல்ல, திரைக்கதை புதிதல்லா, வசனம் புதிதல்ல. இயக்கத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம் அதிலும் அப்படித்தான். இப்படியான கதையில் நடித்த மாதவனின் தைரியத்தை பாராட்டலாம்.

இதிகாச காலத்தின் வசனங்கள் ஈயத்தை காய்ச்சி ஊத்துகிறது காதில். ஆங்கிலம் பேசினால் சீமானுக்கு எவ்வளவு கடுப்பு வருமோ அதேபோல பாவனாவின் மாமன்களாக வருபவர்களின் செயற்கைத்தனமான நடிப்பு, படம் பார்ப்பவர்களுக்கு பெருங்கோபத்தை வரவழைக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனின் திறமைக்கு பேரன்மை வெளிப்படுத்த தோன்றுகிறது. தொடக்கம் முதல் முடிவு வரையிலான காட்சிகளை அழகோவியமாக செதுக்கியுள்ளது சிறப்பு. யுவன்ஷங்கரின் இசையில் 'சி்ன்ன சின்ன கனவுகள்...' பாடல் இதம். முதியோர் இல்லம்பற்றி சொல்லியிருக்கும் இயக்குனர் அதனை பாதியிலேயே அம்போவாக்கிவிடும்போது அனாதையாகிவிடுகிறது திரைகதை.

டைட்டில் கார்டில், மீண்டும் மன்னிக்கவும். எழுத்தோடும் நேரத்தில் Story, Screenplay, Dialog, Direction - Seeman என ஆங்கிலத்தில் போட்டுக்கொள்ளும் இதே இயக்குனர்தான் R.மாதவன் என்பதை ர.மாதவன் என்று மாற்றியவர்.

பொறுமையாக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு 'வாழ்த்துகள்'