திரைவிமர்சனம்

 

தனம்

தனமே மூலதனம்! இயக்குனரின் இந்த நம்பிக்கையை முந்தானையில் வைத்து தாங்கியிருக்கிறார் சங்கீதா. காற்றாட பறக்கும் முந்தானையும், கவர்ச்சி கடை விரிக்கும் அந்த இடுப்பும் போதும். கதை என்னத்துக்கு? ஆனாலும், தைரியமாக ஒரு கதையை சொல்லி அக்ரஹாரத்து ஆசாமிகளுக்கு 'அல்சர்' வரவழைத்திருக்கிறார் இயக்குனர் சிவா. (சிவ சிவா...!)

படிப்பதற்காக ஐதராபாத் போகும் ஆச்சார குடும்பத்தை சேர்ந்த பிரேம், அங்கே விலைமாது சங்கீதாவின் மேல் காதல் கொள்கிறார். ஐநூறு ரூபாய் இருக்கா? என்று ஜொள் மேல் 'பில்' வைக்கும் சங்கீதா, ஒரு கஸ்டமராகதான் பார்க்கிறார் பிரேமையும். ஆனாலும், பிரேமின் 'விடா முயற்சி காதலின்' மீது ஓரளவு நம்பிக்கை வைத்து சில கண்டிஷன்கள் போடுகிறார். அதில் முக்கியமானது "நான் விபச்சாரி என்பதை உங்கள் வீட்டுக்கு சொல்ல வேண்டும். அதையும் மீறி அவர்கள் சம்மதித்தால் கல்யாணத்துக்கு ஓ.கே!"

அக்ரஹாரத்து மாட்டுப் பெண்ணாக அடியெடுத்து வைக்கும் சங்கீதாவை பிரேமின் குடும்பமும் ஏற்றுக் கொள்கிறது. எப்படி? "இவர் வீட்டுக்கு வந்த நேரம்தான் உங்களுக்கு தொழிலில் வெற்றி" என்று சொல்கிறார் ஜோதிடர் கோட்டா சீனிவாசராவ். அவர் சொல்வதை அப்படியே நம்பும் குடும்பம், மற்றொரு சந்தர்பத்தில் ஜோதிடர் சொல்வதை நம்பி, சங்கீதாவின் குழந்தையை விஷம் வைத்து கொல்ல, ஆக்ரோஷமாகிறார் சங்கீதா. ஜோதிடர் ஏன் அப்படி சொல்ல வேண்டும்? சங்கீதா என்ன செய்தார்? இப்படி போகிறது முடிவு.

முழு பாரத்தையும் அசால்ட்டாக தாங்கி பிடிக்கிறார் சங்கீதா. அறிமுகக் காட்சியில் ஒரு நடை நடக்கிறாரே, டிபிக்கல் ஐட்டம்! கைகளை உயிரே தூக்கி சோம்பல் முறித்தபடி கஸ்டமர்களை பிடிக்கும் அவரது ஸ்டைல், ரசிகர்களை முறுக்கேற்றும். தனது குழந்தையை கொன்றவர்களை பழிவாங்க முடிவெடுத்து, அதை நிறைவேற்றும் நேரத்தில் ராணி மாதிரி உட்கார்ந்து ஒரு சிரிப்பு சிரிக்கிறாரே, நீலாம்பரி கேரக்டரே தோற்றது போங்கள். விருதுக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டிய நடிகை!

காதலில் விழுந்துவிட்டால், கௌரவமாவது ஒன்றாவது? சங்கீதாவின் கணவருக்கு சவாலான கேரக்டர். குடும்பமா? பிள்ளையா? தவிக்கிற தவிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் பிரேம்.

ஐநூறு ரூபாய் சேர்த்து எப்படியாவது சங்கீதாவை அடைந்துவிட வேண்டும் என்று தவிக்கிற கருணாஸ், கலகலப்பு மூட்டுகிறார். தங்கள் வீட்டுக்கே அவர் மாட்டுப் பெண்ணாக வருவதை தாங்க முடியாமல் அவர் எடுக்கிற ஆக்ஷன் அதிரடிகள், புஸ்வாணமாகி அவர் பக்கமே திரும்புவது கெக்கக்கெக்கே...

சைவமாக நடித்தாலும், அசைவமாக நடித்தாலும், தனது 'கோட்டா'வை நிறைவாக முடித்துக் கொடுப்பது சீனிவாசராவுக்கு கை வந்த கலையாச்சே! இன்ஸ்பெக்டர் ராஜ்கபூரின் ஆக்ஷனும் திடுக் திருப்பம். க்ரீஷ் கர்னாட்டின் கம்பீரமும், இயலாமையும் அப்ளாஸ்களுக்கு உரியது.

மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவா, ஒவ்வொரு பிரேமிலும் 'வாழ்ந்து' காட்டியிருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் 'கண்ணனுக்கு என்ன வேண்டும்' ஏ கிளாஸ். மற்றதெல்லாம் சி கிளாஸ். சில பாடல்களை இசைஞானியே பாடியிருக்கிறார். குரலுக்கும் வயதாகிவிட்டது!

தனம்- சங்கீதா ஆலாபனை!

<<முற்செல்ல