திரைவிமர்சனம்

 

சண்டை

சண்டையை சலாம் போட்டு வாங்குவதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் நதியா. (காதுகளை மியூட் பண்ணி படம் பார்த்தால், 80-களில் மனக்கதவை தட்டிய அதே நதியா தெரிவார்! இளமை ரகசியத்தை சொன்னால், ஏகப்பட்ட ரிட்டையர்டு நடிகைகள் மார்க்கெட்டை புதுப்பித்து கொள்ள வசதியாக இருக்குமே நதி?) தன் மகள் ராகிணிக்கு சொந்த கிராமத்தில் வைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம். மாப்பிள்ளையும் லண்டன். வந்த இடத்தில் மகளை அடிக்கடி கடத்திப்போக முயல்கிறது ஒரு கும்பல். அவர்கள் வேறு யாருமல்ல, நதியாவின் அண்ணன் ஃபேமிலிதான். அவர்களிடமிருந்து மகளை காப்பாற்ற அடியாள், தெருப் பொறுக்கி சுந்தர் சியை நியமிக்கிறார் நதியா. ஆனால் காவல் பூனையே மொத்த பாலையும் குடித்துவிட, விக்கித்து நிற்கும் நதியா, அடுத்தடுத்து செய்கிற வில்லத்தனங்களும், கள்ள குணங்களும்தான் கதை.

லண்டன் மாப்பிள்ளை தாலி கட்டும் நேரத்தில் பின்வாங்கிவிட, பொருத்தமான மாப்பிள்ளையை அந்த கிராமத்தில் எப்படி தேட முடியும்? சொன்ன நேரத்தில், சொன்ன தேதியில் கல்யாணத்தை முடிப்பேன் என்று அண்ணனிடம் சபதம் போட்ட நதியா என்ன செய்வார்? திடீர் மாப்பிள்ளையாகிறார் சுந்தர் சி. அவர்தான் தன் அண்ணன் மகன் என்று பிறகு தெரியவர, ருத்ர தாண்டவம் ஆடுகிறார் நதியா. இவருக்கும் மருமகன் சுந்தர்சிக்கும் நடக்கிற சண்டைகளில் பொறி பறக்கிறது. ஒருகட்டத்தில் மருமகனையே குண்டு வைத்து கொல்ல நினைக்கிறார் நதியா. முடிவு வழக்கம் போல் சுபமஸ்துமுனீஸ்வரன் கோவில் காவல் சிலை மாதிரியே கம்பீரமாக இருக்கிறார் சுந்தர் சி. இவரது ஆடைகளில் எந்த நேரமும் குறைந்தது 12 கலர்களாவது டாலடிக்கிறது. ஐந்தடி அரிவாளோடு மோத தயாராகும் வில்லனிடம், எட்டடி உயர அரிவாளோடு இவர் பிரசன்னமாகிறார். விசில் பறக்கிறது தியேட்டரில். (பிடிச்சிட்டாருய்யா கரெக்ட் ரூட்டை) அத்தையின் நன் மதிப்பை பெற, அவர் கொடுக்கும் லட்சக்கணக்கான சன்மானங்களை விட்டுத்தள்ளுகிற சுந்தர் சி அவரது மொத்த சொத்துக்கும் அடி போட, அதே நோக்கத்தோடு உள்ளே நுழையும் விவேக்கும் பொறி கலங்க வைக்கிறார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து அமெரிக்க மாப்பிள்ளையை விரட்டியடிக்க தோண்டுகிற குழியில் இவர்களே விழுந்து தவிப்பது கலகலப்பு. அங்கங்கே தனி ஆவர்த்தனமும் செய்கிறார் விவேக். அந்த ஆய் சங்க காமெடியில் மட்டும் அவர் விவேக் அல்ல, உவ்வேக்!சிம்மக்கல் சின்னக்கிளியாக நமீதா. சின்னக்கிளியா அவர்? மெகா சைஸ் பருந்து. குளத்தில் குளிக்கும் அவரை கரைக்கு கொண்டு வர, சுந்தர் சி செய்யும் யுக்தி, பலே! ஆனாலும் முடிவு சப்!கொஞ்ச நேரமே வந்தாலும் கலெக்டர் நெப்போலியன், கவனத்தை ஈர்த்திருக்கிறார். க்ளைமாக்சில் அதே போல் ஒரு காட்சியை வைத்து நதியாவின் மனதை திருத்துகிற இடத்தில் டைரக்டர் பிரசண்ட் சார்.

காதல் தண்டபாணி, ரவிமரியா, ராஜ்கபூர் என்று டிபிக்கல் வில்லன்களும் குளோஸ்-அப்பில் வந்து குமுறுகிறார்கள்.அமெரிக்காவில் எல்லா உறவுகளையும் ஆன்ட்டி, அங்கிள் என்று இரண்டு வார்த்தைகளுக்குள் முடிச்சிடுறாங்க அத்தே. ஆனா, இங்கேதான் அத்தை, சித்தி, மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று ஏகப்பட்ட வார்த்தைகள். -இப்படி டயலாக்கில் கலாச்சாரத்தையும் கௌரவப்படுத்தியிருக்கிறார்கள் சபாஷ். (வசனம்-ரவிமரியா)அட, ராகிணி ராகிணின்னு ஒரு புதுமுகம் அறிமுகம் ஆகியிருக்கே. அதுபற்றி ஒண்ணுமே சொல்லலியே என்கிறீர்களா? அட விடுங்க சார் பாவம்!வாடி என் கப்பக்கிழங்கேவை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் தினா. உறுமி அடிக்கிறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இதிலே மிச்சம் வைக்க என்ன இருக்கு என்பது மாதிரி மீதி பாடல்கள். அதிலும் விஜய.டி.ராஜேந்தர் பாடிய ஆத்தாடியில் தோலே பிய்ந்து போயிருக்கும்.

ஒருத்தரையும் சேதப்படுத்தாத சண்டை