திரைவிமர்சனம்

 

பாண்டி

மீண்டும் ஒரு முறை ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் ராகவ லாரண்ஸ். ஆனால் பாண்டி, அவருக்கு சற்று ஏமாற்றமான படம் என்றுதான் சொல்ல வேண்டும்.


பாண்டி படத்தின் கதையும், திரைக்கதையும் தமிழ் ரசிகர்களுக்குப் புதிதல்ல. சில பழைய ரஜினி படங்கள், லேட்டஸ்டாக வந்த வெயில், எம் மகன், ஜெயம், வீராப்பு உள்ளிட்ட படங்களின் சாயலை பாண்டி பல இடங்களில் நினைவுபடுத்துகிறது. போதாக்குறைக்கு, ரஜினியின் மாசி மாசம் ஆளான பொண்ணு பாடலையும் ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

பாண்டி (லாரண்ஸ்) பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர். தன்னைப் போலவே வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் சிலரைச் சேர்த்துக் கொண்டு 'ஊர் வலம்' வருகிறார். அவரது அப்பா கட்டுப்பாடான, பள்ளிக்கூட தலைமை ஆசிரியர். பாண்டியை அவருக்கு கட்டோடு பிடிக்காது. அவரது பழக்க வழக்கம், நட்புக் கூட்டம் ஆகியவற்றைக் கண்டாலே கடுகடுப்பாகி விடுவார்.

ஆனால் அம்மா சிவகாமியோ (சரண்யா) மகன் மீது பாசத்தைக் கொட்டுபவர். அவர் செய்யும் தவறுகளையும், சில்மிஷங்களையும் மறப்போம், மன்னிப்போம் பாலிசியின்படி கண்டுகொள்ளாமல் விட்டு விடுபவர்.

சூழ்நிலை காரணமாக பாண்டி துபாய் போக நேரிடுகிறது. அங்கு ஒரு வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தம். இந்த சமயத்தில்தான், பாண்டியின் பால் அவரது அப்பாவுக்கு அன்பு பிறக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் பாண்டியின் தந்தையின் பரம விரோதியான ராஜ்கபூர், பாண்டியின் தாயாரைக் கொன்று விடுகிறார். பாண்டி துபாயிலிருந்து திரும்புகிறார். தாயைக் கொன்றவரைப் பழிவாங்க கிளம்புகிறார். மிச்ச சொச்சம்தான் படத்தின் கதை.

சண்டைக் காட்சிகளில் சாகசம் செய்ய முயற்சித்திருக்கிறார் லாரன்ஸ். ஒண்டி ஆளாக 12, 15 பேரை அடித்து துவம்சம் செய்கிறார். 6 பாடல்களில் நடனம் ஆடி தூள் கிளப்புகிறார். அடிதடி, ஆட்டம், பாட்டம், சென்டிமென்ட் என அத்தனையையும் கலவையாக்கி படத்தை எடுத்திருக்கிறார்கள்.

நடனத்தில் லாரன்ஸ் வழக்கம் போல ஜோராக இருக்கிறார். இருப்பினும் மற்ற விஷயங்களில் அவர் இன்னும் மேம்பட வேண்டும்.

மேலும் ஒரே மாதிரியான ஸ்டைல், மேனரசித்தை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் லாரன்ஸ் பிடித்துக் கொண்டிருக்கப் போகிறாரோ என்ற அலுப்பும் ஏற்படுகிறது.

நமீதாவை ஐட்டம் டான்ஸர் போல பயன்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு பாடல்களில் கிளாமராக கிளுகிளுக்க வைத்து விட்டுப் போகிறார்.

ஸ்னேகா படம் முழுக்க கலக்கியிருக்கிறார். சில காட்சிகளில் படு கிளாமராக காட்சி தருகிறார். இருப்பினும் அவரது நடனமும், நடிப்பும் பார்ப்பவர்களை சந்தோஷிக்க வைத்துள்ளது.

நாசர், சரண்யா, இளவரசு ஆகியோர் நடிப்பில் வழக்கம் போல சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்களில் சரண்யாவின் நடிப்பு ஏ-ஒன்.

கிளைமாக்ஸ் காட்சி போரடிக்கிறது, சற்று எரிச்சலையும் தருகிறது.

ஸ்ரீகாந்த் தேவா, தான் ஒரு இசையமைப்பாளர் என்பதை சற்று நினைவில் கொண்டால் நலம். அத்தனை சத்தம் அவரது இசையில். இனிமையாக இருந்தால்தான் இசை, இல்லாவிட்டால் இம்சை என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னால் தேவலை.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான மாசி மாசம் ஆளான பொண்ணு என்கிற அந்த அருமையான பாடலை, அப்படிப் போட்டுக் கொத்தியிருக்கிறார் ஸ்ரீகாந்த்.

இயக்குநர் ராசு மதுரவன் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்கலாம்.