திரைவிமர்சனம்

 

ஃ (அக்கு)

உச்சி மயிரை பற்றி இழுத்த மாதிரி இருக்கிறது அந்த ஒன்றரை மணி நேரமும்! ஆட்டு மந்தை போல் போய் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை சின்ன பிரம்பை வைத்துக் கொண்டு திசை திருப்ப முயன்றிருக்கிறார் படத்தின் இயக்குனர் மாமணி.

இதுபோன்ற படங்களை ஓட வைக்கவில்லை என்றால், 'மக்களே நாசமா போங்க' என்று திட்டுவதை தவிர வேறு வழியில்லை. ஸ்ரீஜிக்கும் அஜய்க்கும் காதல். இது அண்ணன் ரக்ஷைக்கு தெரியவருகிறது. வழக்கமான அண்ணனாக இருந்தால் நானூறு அடிக்கு ஃபைட் இருக்கும். இவர் அண்ணன் மட்டுமல்ல, டெக்னாலஜியில் மன்னன்! அஜய்யை அடித்து அவரது இரண்டு ஷ§விற்குள்ளும் ரேடியம் கலந்த வெடிகுண்டுகளை பொறுத்தி விடுகிறார். ஓடிக்கொண்டேயிரு. எப்போது நிற்கிறாயோ? அப்போது நீயும் டமால், உன்னை சுற்றியிருக்கிற பகுதியும் டமால் என்று கூறிவிட்டு ஓட விடுகிறார். அதன்பின் மிச்சமிருக்கிற எட்டு ரீல்களையும் இழுத்துக் கொண்டு வேகமாக ஓட ஆரம்பிக்கிறார் அஜய்.

விஷயம் தெரிந்ததும் சேனல், போலீஸ், வெடிகுண்டு பிரிவு, மருத்துவர் குழு என்று கூட்டமே அவர் பின்னால்! ஹைவேஸ் சாலையில் அணிவகுப்பு போல் நடக்கும் அந்த அசம்பாவிதமே ஒரு அழகுதான்! கேமிராமேனுக்கு ஒரு ஓஓஓஓஓ....! ஒருவன் காலையிலிருந்து இரவு வரை ஓடிக் கொண்டேயிருக்க முடியுமா? லாஜிக் மீறாமல் அதற்கும் பொருத்தமான காரணங்களை சொல்லியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்திற்கு எடுத்துக்காட்டு. ஓடிக்கொண்டேயிருக்கும் அவனை காப்பாற்றிவிடுவார்கள் என்பது தெரிந்ததும், கூடுதலாக ஒரு கூட்டத்தை அனுப்பி அஜயை தீர்த்து கட்ட நினைக்கிறான் அண்ணன். இதை சமாளிக்க நடக்கிறது துப்பாக்கி யுத்தம். இப்படி ஓட்டத்திலிருந்து விலகி வேறொரு பக்கத்திலும் சுவாரஸ்யத்தை கலக்கிறார் இயக்குனர்.

தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கதாநாயகியை காப்பாற்ற மெல்ல மெல்ல அந்த இடத்தை சேஸ் செய்யும் போலீஸ் அதிகாரி, கடைசியில் மூன்று தெருவிற்குள் இருக்கும் அவரது இடத்தை கண்டுபிடிக்க செய்யும் கரண்ட் ஆஃப் யுக்தி பலே!

புதுமுகமாக இருந்தாலும், தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் அஜய். நிஜமாகவே ஓட்டப்பந்தய வீரராக இருப்பார் போலிருக்கிறது. சாகிற கடைசி நிமிஷம் வரைக்கும் வாழ்வதற்காக போராடுவோம் என்று அவரே சொன்ன வசனத்தை படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார். கடைசியில் டிரெட் மில்லில் ஏறி ஓடிக்கொண்டே உயிருக்காக போராடும் போது படக் படக் என்று அடித்துக் கொள்கிறது இதயம்.

நீண்ட கூந்தல், நெருஞ்சி முள் பார்வை என்று அசத்தியிருக்கிறார் புதுமுகம் ரக்ஷை! எதிர்காலம் நிச்சயம்! கவனிக்கப்பட வேண்டிய இன்னொருவர் அந்த போலீஸ் அதிகாரி ராம்கண். பவர் ஃபுல் கண்!

மனிதனை தொடாமலே சிகிச்சை செய்ய இத்தனை எக்யூப்மென்ட்டுகளா? வியப்பு. அனுஹாசனின் தைரியமும், புத்திசாலித்தனமும் இது சினிமா என்பதையே மறக்க வைக்கிறது. படத்தில் பாடல் இல்லை. பழிவாங்கல் இல்லை. பிழிய பிழிய அழும் சென்ட்டிமென்ட்டுகள் இல்லை. என்ன நினைத்தார்களோ, படத்தை பற்றிய விளம்பரங்களும் இல்லை. (ஏன் சார்?)

ஓட்டத்தை பற்றிய படம் படம் மட்டுமல்ல. ஓட வேண்டிய படமும் கூட!