திரைவிமர்சனம்

 

தோழா

சென்னை 28 பசங்களின் மற்றொரு ஜாலி ட்ரிப். ஆனால் டிரைவரை மாற்றியிருப்பதால், அங்கங்கே பிரேக் டவுன்! நாலு பையன்களும் ஒரு பொண்ணும் டைப் படங்கள் நிறைய வந்திருக்கின்றன.

இதில் நாலு ஈஸ்ட் நாலு என்ற விகிதத்தில் ஜோடிகள்.நிதின் சத்யா, பிரேம்ஜி, விஜய் மூவரும் நண்பர்கள். விஜய்க்கு சினிமா கனவு. பிரேம்ஜிக்கு அரசு வேலை கனவு. இவர்களின் ஜீவாதாரத்திற்கு உதவுகிற நண்பராக நிதின். இவருக்கும் ஒரு காதல் உண்டு. இந்த நிலையில் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திறங்கும் அஜய்ராஜ் கையில் அரைகுறையாக ஒரு போட்டோ, ஆளை வெட்ட ஒரு அரிவாள்! வெறியோடு திரியும் அஜய் அந்த போட்டோவில் இருக்கும் நபரை படம் முழுக்க தேடிக் கொண்டேயிருக்கிறார். இறுதியில் அவர் தேடும் நபர் நிதின் சத்யாதான் என்பது தெரியவர, என்னாச்சு? என்பது க்ளைமாக்ஸ்.


 

தனித்தனி காதலை சொல்லி முடிக்கவே இரண்டரை மணி நேரம் போய்விடுகிறது. இதில் நிதின் தலையில் கல் விழ, அவ்வப்போது புரியாத வார்த்தைகளில் விவாதித்துக் கொள்கிறார்கள் மருத்துவர்கள். வாழப்போவது இன்னும் கொஞ்ச நாள்தானே என்பதால் சில முடிவுகளை எடுக்கிறார் நிதின். அங்குதான் ஏற்படுகிறது பிரச்சனை. எங்கிருந்தாலும் வாழ்க முடிவுடன் காதலை விலக்கிக் கொள்ளும் நிதின், தனது காதலியாவது நன்றாக வாழ்வாள் என்று நினைக்க, காதலியோ வேறு முடிவு எடுக்கிறார். கொஞ்சம் சிக்கலான “பொருத்துக” மேட்டர்தான். அதை சிக்கலில்லாமல் சொன்னதால் இயக்குனரை மெச்சலாம். கதையை நுணுக்கமாக சிந்தித்தவர்கள், ஹீரோயின்களை செலக்ட் பண்ணுகிற விஷயத்தில் நோஞ்சான்களாகி இருக்கிறார்கள். ஹீரோயின் பக்கத்தில் நிற்கும் தோழி கெட்டப்புக்கு கூட தாங்காத முகங்கள்.


 

சோகத்தை சுமக்கிற நிதின் சத்யாவை விட, எந்நேரமும் கலகலப்பாக இருக்கிற விஜயிடம் துள்ளலும், துடிப்பும்! யார் வீட்டையோ, தனது வீடாக காண்பித்து பணக்கார ஃபிகரை வளைத்துப் போடும் சாமர்த்தியமும், நினைத்தது போல் ஹீரோவாகி காட்டுவதும் சுவாரஸ்யம். டான்ஸ் காட்சிகளிலும் பம்பரமாக சுழல்கிறார்.

பிரேம்ஜி, “கொடுமை சார்” விஷயத்தை விட்டு வெளியே வரவே மாட்டேன் என்கிறார். இவருக்கு ஒரு டூயட் வேறு. நகைச்சு-வை என்பது போலவே இருக்கிறது இவரது நகைச்சுவை.

எந்நேரமும் அரிவாளோடு திரியும் அஜய்ராஜும் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இடம் பிடிப்பார். கையில் எப்போதும் கிழிக்கப்பட்ட போட்டோவோடு அவர் திரிவதாக காண்பிப்பது போர்.

வெயிலுக்கு குடை போல வெண்ணிறாடை மூர்த்தி. ஆறுதல்.

இசையும் பின்னணி இசையும் பலே. நடிப்பதை விட்டு விட்டு இதையே முழு நேரமும் செய்யலாம் பிரேம்ஜி.

நால்வரில் சிலர் மட்டும் தோழா! மற்றவர்கள் வழவழா!