திரைவிமர்சனம்

 

வல்லமை தாராயோ

பாரதியின் வரிகளை தலைப்பில் வைத்துக் கொண்டு பெண் ஒருத்தியின் பிரச்சனையை பேசாமல் இருந்தால் எப்படி? கட்டியவனின் காதலை வெட்டி விடவும், காதலனை கட்டிக் கொண்டு முத்தமிடவும், தவியாய் தவிக்கும் சாயாசிங்கின் மன ஓசைகள்தான் படம் மொத்தமும்.


இந்தோனேஷியாவில் வளர்ந்தாலும், இஞ்சிமரபா மாதிரி காரம் குறையாத கதையை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் மதுமிதா!  சேகர்...சேகர்...என்று அந்த பெயரை கேட்கும்போதெல்லாம் ஐஸ் கட்டியை விழுங்கிய மாதிரி ஆனந்தப்படும் சாயாசிங், வலுக்கட்டாயமாக பார்த்திபனுக்கு கட்டி வைக்கப்படுகிறார். திருமணத்திற்கு முன் வருங்கால மனைவியிடம் பேச வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் கூட கடைசி நேரத்தில் ஏமாந்து போக, அரங்கேறுகிறது டும்டும்டும்!

முதல் கசப்பாக துவங்குகிறது வாழ்க்கை. என்றேனும் ஒரு நாள் மனைவி மனம் மாறுவாள் என்று பார்த்திபனும், இந்த உறவை முறித்துக் கொண்டு சேகருடன் கலந்துவிட வேண்டும் என்று சாயாசிங்கும் நாட்களை நகர்த்த, என்ன நடந்தது என்பது முடிவு.

தன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்தது என்பதற்காக கணவனை கொலைகாரன் போல் பார்க்கும் சாயாசிங் கேரக்டர் பிசிறடிக்கிறது. படித்த பெண்! தனது பழைய காதலை எடுத்து சொல்லியிருக்கலாமே? ஆனாலும், இருவருக்குமான காட்சிகளில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லை. இருவரும் ஒரே ஆபிசில் வேலை பார்ப்பது தெரியாமல், பார்த்திபன் தன்னை பின் தொடர்வதாக கருதும் சாயா முகத்தில் அப்போதும், அதன்பின்பும் கடுகை போட்டால் பொறியும் எரிச்சல். இந்த லட்சணத்தில் தனது வேலைக்காரி, பார்த்திபனிடம் போனில் பேசியதை கேட்டபின், பார்த்திபன் வேவு பார்ப்பதாக நினைத்து பொங்குவது பயங்கரம். 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி கேரக்டர் பார்த்திப குசும்புகளில் ஒன்று!

ஒரு தப்பும் செய்யாமலே கோர்ட்டில் வக்கீல்களின் அநியாய பழி சுமத்தல்களுக்கு ஆளாகும் பார்த்திபன், அத்தனையையும் தாங்கி கொள்வது பரிதாபம். இவர் ஒரு சேடிஸ்ட், சைகோ என்று வக்கீல் பார்த்திபனை நோக்கி கைகாட்டும் போதெல்லாம் விஷம சிரிப்பு சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.

பார்த்திபன் அவரது ஸ்டைலில் உருவாக்கிக் பேசும் வசனங்கள், தியேட்டரில் சிரிப்பலைகளை எழுப்பிக் கொண்டே இருப்பது ப்ளஸ்! போதாதற்கு கருணாசின் தனி டிராக் காமெடி வயிற்றை கலக்குகிறது. அப்பாவி பசங்களுக்கு கார் ஓட்டக் கற்று கொடுப்பதற்குள், 'ஆஃப் பாடி' ஆகிவிடுகிறார் மனிதர். ஒரு டீயை ஆர்டர் கொடுத்து, இவர் போன் பேசிவிட்டு வருவதற்குள் கடையே சர்வ நாசம் ஆகியிருப்பது வடிவேலு ஸ்டைல் என்றாலும், வாய்விட்டு சிரிக்கலாம்.

"நான் கோவமா இருந்தா கொஞ்சமா பேசுவேன்" என்ற ஒரே டயலாக்கை அடுத்தவர் காதில் ரத்தம் வரும் வரை பேசியே கொல்கிறார் ஆனந்தராஜ். எரிச்சல்!

கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீகாந்த். புதுமுகம் ஒருவரே போதும் இந்த காட்சிக்கு (பல் குத்த தங்க ஊசி அவசியமா?)

பரத்வாஜின் பாடல்கள் ஓ.கே! பின்னணி இசைக்கு அவரே வேறு எங்காவது டிரெய்னிங் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு காட்சியில் பார்த்திபனே, இது மௌனராகம் என்கிறார். மூன்றாவது டிகாஷனில் போட்ட 'காப்பி'

<<முற்செல்ல