திரைவிமர்சனம்

 

ராமன் தேடிய சீதை                                                                     

ராமனுக்கு குகன் மாதிரி, சேரனுக்கு இந்த ஜெகன் போலிருக்கிறது. குருநாதரை 'எங்க வீட்டுப் பிள்ளை'யாக்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு 100 சதவீத வெற்றி!

 திருமண அழைப்பிதழ்கள் விற்கும் ஒருவருக்கு, திருமணமே கனவாக இருந்தால் எப்படியிருக்கும்? இந்த கற்பனையில் சுவாரஸ்யத்தை ஊற்றி, சென்ட்டிமென்ட் யாகம் நடத்தியிருக்கிறார் இயக்குனர் ஜெகன்நாத். தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மாணவராக வரும் சேரனுக்கு மேற்கொண்டு படிப்பை தொடர முடியாதபடி மனநோய். சிகிச்சைக்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி வளமாக வாழும் இவருக்கு பெண் பார்க்கிறார்கள்.


 

தனக்கு சிறுவயதில் வந்த மன நோயை மறைக்காமல் எடுத்துச் சொல்லும் சேரனுக்கு கிடைப்பது பெண் அல்ல, மனசு நிறைய புண்! ஏராளமான பெண்கள் இவரை வேண்டாம் என்று மறுக்க, ஒரே ஒருவர் மட்டும் எஸ் என்கிறார். சந்தோஷமாக திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. தாலி கட்டும் நேரத்தில் மணமகள் எஸ்கேப். அந்த பழியை தன் மேல் போட்டுக் கொள்ளும் சேரனை தனது சொந்த மகனாகவே நினைக்கிறார் ஒடிப்போன பெண்ணின் அப்பா மணிவண்ணன். உனது திருமணம் எனது பொறுப்பு என்று கிளம்பும் இவர், சேரனை பெண் பார்க்க அழைத்துச் செல்வதும், அங்கே நடக்கும் சம்பவங்களும்தான் மீதி கதை. உணர்ச்சிவசப்படுகிற போதெல்லாம் வார்த்தைகள் தந்தியடிக்க திக்கி திணறும் சேரன் புதுசு. ஒரு கட்டத்தில் மனசு மரத்துப் போய், "வேண்டாம் சார். ஊருக்கு போயிடலாம்" என்று மணிவண்னிடம் கெஞ்சுவது பரிதாபம். தன்னை உதாசீனப் படுத்திய பெண்களிடம் அவர் காட்டும் அன்பும் பரிவும், தாய்மார்களின் தேசத்தில் சேரனுக்கு தனி 'நாற்காலி' போட்டுக் கொடுக்கும்.


கதையின் நாயகன் சேரன் என்றாலும், உப நாயகர்களாக பசுபதியும், நிதின் சத்யாவும். பார்வையற்ற பசுபதி, நெடுமாறன் என்ற பெயரில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்ப்பதும் தன்னம்பிக்கை பற்றி முழங்குவதும் ராஜ கம்பீரம். இவரை காதலிக்கும் கஜாலாவிடம் நேரடியாக ஒட்டிக் கொள்ளாமல் அவரது வீட்டுக்கே போய் பெண் கேட்கும் ஆண்மையை ரசிக்கலாம். கண்ணில்லாத போதும், எதிரிகளை துவம்சம் பண்ணும் சண்டைக்காட்சிகளில் யதார்த்தம்! அடிக்கடி மூக்கையும் நெற்றியையும் சுளித்து பிறவி குருடர் போல நடிக்கும் அந்த நடிப்பு பசுபதிக்கேயுரிய பட்டா நிலம்!  நிதின் சத்யாவின் 'திருட்டு' காதலில் ருசி அதிகம். அத்தனை நகைகளையும் விட்டு விட்டு கார்த்திகாவின் ரிப்பனை மட்டும் காதலோடு தூக்கிக் கொண்டு ஓடுகிறார். நாலு பேரு பாராட்டுற மாதிரி நடக்கணும் என்ற அவரது அட்வைஸ் கேட்டு மராத்தான் ரேசில் கலந்து கொண்டு பாராட்டுகளை வாங்குவதும், அந்த மமதையோடு வந்து கார்த்திகாவிடம் பாட்டு வாங்குவதும் தியேட்டரை 'கலீர்' ஆக்குகிறது.

நாயகிகள் ஐந்து பேரில், ரம்யா நம்பீசனுக்கும், விமலா ராமனுக்கும் மூக்கை உறிஞ்சும் ரோல்கள். கஜாலா, கார்த்திகா, நவ்யா காட்டில் உற்சாக மழை. போலீஸ் இன்ஸ்பெக்டர் நவ்யா நாயரை ஸ்டேஷனுக்கே பெண் பார்க்க போகும் சேரனுக்கு கிடைக்கும் 'லட்டி' விருந்து காமெடியும் கண்ணீரும் கலந்த விபரீத டேஸ்ட்!  

 

க்ளைமாக்சில் சேறும் சகதியுமாக வந்து நிற்கும் சேரனுக்கு இறந்து போன அப்பாவின் டிரஸ்சை கொடுக்கிறார் மம்தா. சற்று அளவு பெரிதான பனியனோடு அடுத்த சீனில் சேரன்! இப்படி ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார் டைரக்டர் ஜெகன்நாத். படம் நெடுகிலும், சென்ட் தெளித்த மாதிரி இழையோடுகிற நகைச்சுவை பலம்! இந்த சீனில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாமே என்று முணுமுணுக்க வைக்காத எடிட்டர் கோலா பாஸ்கருக்கு ஒரு பலே. நாகர் கோவிலின் அழகை பந்தி வைத்திருக்கும் ராஜேஷ் யாதவின் கேமிராவுக்கு ஒரு சபாஷ். 'என்ன புள்ள செஞ்ச நீ' பாடலில் ஜெயந்தாவின் வரிகளுக்கும், வித்யாசாகரின் மெட்டுக்கும் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம். ராமன் தேடிய சீதை, மக்கள் தேடிய படம்!                                                                     

<<முற்செல்ல