திரைவிமர்சனம்

 

வாரணம் ஆயிரம்
[ Sunday, 16 November 2008, 06:07.38 PM GMT +05:30 ]

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் வாரணம் ஆயிரம், ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள ஆழமான பிணைப்பின் இனிய பதிவு.


 

ராணுவ அதிகாரி மேஜர் சூர்யா, ஒரு அதிரடி மீட்பு நடவடிக்கையில் இறங்கும் நேரத்தில் அவருடைய தந்தை மரணச் செய்தி வருகிறது. மனம் உடைந்து போனாலும் தந்தை சொல்லிக் கொடுத்த கடமையுணர்வு பாதியில் அவரைத் திரும்ப விடாமல் தொடர்ந்து அந்த மீட்புப் பணியில் இறங்க வைக்கிறது. பிளாஷ்பேக்கில் தந்தையின் நினைவுகள் மனதுக்குள் அவிழ, அவை காட்சிகளாக விரிகின்றன.

அப்பா கிருஷ்ணன் (சூர்யா) ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர், அம்மா மாலினி (சிம்ரன்), தங்கை என உயர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த நாயகன் சூர்யா (சூர்யா), திருச்சி பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். அப்பா செல்லம். வகுப்பில் கவனம் செலுத்தாமல் சினிமா பார்த்தபடி ஊரைச் சுற்றிப் பொழுதைக் கழிக்கிறார்.

ஒரு திடீர் தருணத்தில் மேக்னா (சமீரா) என்ற தேவதையை ரயிலில் சந்திக்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். பேச்சுவாக்கில் அவர் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் படிக்கப்போவதைத் தெரிந்து கொள்கிறார்.

நிச்சயம் உன் வாழ்க்கையில் நான் வந்தே தீருவேன், என கூறுபவர் அதைச் செய்தும் காட்டுகிறார். ஆனால் எதிர்பாராத விபத்தில் சமீராவைப் பறிகொடுத்து, பித்துப் பிடித்து அலையும் சூர்யாவை அப்பாவும் அம்மாவும்தான் மீண்டும் மனிதனாக மாற்றுகிறார்கள்.


 

அந்த நேரத்தில் சூர்யா வாழ்க்கையில் ப்ரியா (திவ்யா ) நுழைகிறாள், சூர்யா ராணுவ அதிகாரியாகிறான்... எல்லாமே தந்தையின் வழிகாட்டுதல்களுடன். ஒரு நண்பனாக, குருவாக... எல்லாமாக இருந்து வழிநடத்திய அந்த தந்தை ஒரு நாள் மரணத்தைத் தழுவுகிறார்... சூர்யாவின் உலகம் அஸ்தமனமாகிறது. ஆனால், அதன் பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறார் அம்மா. பயணம் தொடர்கிறது... என கவிதையாக முடிக்கிறார் கவுதம் மேனன்.

கிட்டத்தட்ட தன் தந்தையைப் பறிகொடுத்த சோகத்தின் பிரதிபலிப்பை மிக நுணுக்கமாகப் பதிவு செய்துள்ளார் கவுதம் மேனன். இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா எனக் கேட்க வைக்கிற மாதிரியான பாத்திரப் படைப்பு. அதை சூர்யா உள்வாங்கிச் செய்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

சில காட்சிகளில் தந்தை சிவகுமாரையே தூக்கிச் சாப்பிடுகிற மாதிரி அநாயாசம் காட்டுகிறார் சூர்யா. பெரிதாக மேக்கப் கிடையாது, ஆனால் வெறும் பார்வைகளாலும், இயல்பான உடல்மொழிகளாலும் 60 வயது முதியவரைப் பிரதிபலித்திருக்கிறார் சூர்யா.
இளம் சூர்யா இனிய புயல் மாதிரி மனதைத் திருடுகிறார்.

படத்தின் பெரிய ப்ளஸ் சமீரா ரெட்டி. படத்தில் சூர்யா அடிக்கடி 'பாடும் என் இனிய பொன் நிலாவே...' பாடலுக்கென்ற படைக்கப்பட்ட மாதிரி அள்ளும் அழகு... கூடவே இயல்பான நடிப்பு. இன்னொரு இனிய மும்பை வரவு.


Title.

சிம்ரன், திவ்யா இருவரும் நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இன்னும் இரு ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஒருவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இன்னொருவர் ஒளிப்பதிவு இயக்குநர் ரத்னவேலு.

கழுவித் துடைத்துவிட்டது போன்ற அழகிய இயற்கைச் சூழலில், சான்பிரான்ஸிஸ்கோ பாலத்தின் பின்னணியில் சமீராவும், சூர்யாவும் காதலைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் இசையும், காமிராவும், சமீரா - சூர்யா நடிப்பும் யாரையும் காதலில் விழ வைக்கும்.

படத்தின் முதல் பாதி ஜிவ்வென்று பறக்க, இரண்டாம் பாதி சற்ரே ஜவ்வாகிவிடுவதை கவுதம் சற்றே கவனித்திருக்கலாம்.

அதே போல வசனங்களில் இன்னும்கூட தமிழுக்கு கூடுதல் ஒதுக்கீடு தரலாம்... எடுப்பது தமிழ்ப் படம், தமிழ் வசனங்களில் மட்டும் எதற்கு இவ்வளவு கஞ்சத்தனம் மேனன்?

<<முற்செல்ல