திரைவிமர்சனம்

 

பிரிவோம் சந்திப்போம்

அடடா... இப்படியொரு குடும்பம், இப்படியான உறவுகளாய் எல்லாமும் எல்லோரும் மாறிவிட்டால் ஸ்டவ் வெடிப்புகள், தீக்குளிப்புகள், தட்சணை கொடுமைகள், நிலுவையில் குவியும் விவாகரத்து வழக்குகள் எதுவுமின்றி குடும்பம் சந்தோஷ பூங்காவாக மாறும் என்பதை அழகாக சித்தரிக்கும் சித்திரம். மெரீனா பீச்சில் காணும்பொங்கலுக்கு கூடும் கூட்டத்தின் கால்வாசி அளவுக்கான உறவுகளை கொண்டது சேரனின் குடும்பம். மின்துறை பொறியாளரான சேரனுக்கு சினேகாவை சம்பந்தம் பேசி முடிக்கின்றனர். பிளவுகளற்ற கூட்டுக்குடும்பத்தில் வாழப்போகும் சந்தோஷத்தில் வலது காலை எடுத்துவைக்கிறார் சினேகா. மணிக்கு நூறுமுறை தன் நெருக்கத்தை விரும்பும் கணவன், வெந்நீர் போடக்கூட தெரியாத தன்னை சமையலில் கெட்டிகாரி என்று விருந்தாளியிடம் பெருமை பேசும் பாட்டி, பெரிய ஆபிசர் என்றும் பாராமல் மனைவியின் வேலைகளை பகிர்ந்துகொள்ளும் மாமனார் என சேரனின் மொத்த குடும்பமே கோயிலாய் காட்சியளிக்க, சினேகாவின் சந்தோஷத்தில் குண்டு போடுகிறது கணவனின் வேலையிட மாற்றம்.


திருவிழா கொண்டாடிய திருப்தியில் இருந்த சினேகாவுக்கு தனிக்குடித்தன வாழ்க்கை திருவிழாவில் காணாமல்போன குழந்தையாய் தவிக்கவைக்கிறது. இதுவே நாளடைவில் சினேகாவை மனநோயாளியாக்குகிறது. பிரிந்த கூட்டுக்குடும்ப சந்தோஷம் திரும்ப கிடைக்கிறதா? இல்லையா? என்பது மீதி கதை. குத்துப்பாட்டும் குமட்டும் வசனங்களுடன் வரும் தமிழ் படங்களுக்கு மத்தியில் எப்போதாவது வரும் நாகரிகமான படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. தனிக்குடித்தனம் விரும்பும் தம்பதிகள், மருமகளை மெச்சாத மாமியார் என சகல உறவுகளையும் மனம்திருந்த செய்யும் நல்ல சிகிச்சையாக கதை, திரைக்கதையை தீட்டியிருக்கும் இயக்குனர் கரு. பழனியப்பன் பாராட்டுக்குரியவர்.

கதையின் நாயகனாக சேரன் அச்சுறசுத்தமாக தன்னை பொருத்திக்கொள்கிறார் கதாபாத்திரத்தில். திருமணமான புதிதில் சினேகாவை அடிக்கடி அழைத்து வழிந்து நிற்பது, சுய நினைவிழந்து போகும் மனைவியின் நிலைகண்டு பதறுவது என நிறைய இடங்களில் இயல்பை மீறாத நடிப்பை பார்க்கமுடிகிறது. லட்சணமான முகம், கச்சிதமான நடிப்பு என சினேகாவுக்கு திருஷ்டிபடும் அம்சங்கள் படத்தில் நிறைய உண்டு. கூட்டுகுடும்பத்தின் வாழ்க்கைக்கு ஆசைப்படும் தனது ஏக்கத்தை கண்களால் உணர்த்தும் காட்சிகளில் சினேகாவிற்கான விருதுகள் உறுதி செய்யப்படுகிறது.

மருத்துவராக வரும் ஜெயராம் உணர்த்தும் விஷயங்கள் ஒவ்வொரு கணவன்மார்களின் மனதிலும் பசுமரத்தாணியாய் பதியும். காமெடி என்ற பெயரில் கன்றாவிகளையெல்லாம் காட்டாமல் எம்.எஸ். பாஸ்கர் - லட்சுமணன் கூட்டணில் விதைக்கப்படும் முற்போக்குதனமான சிந்தனைகளுக்கு தியேட்டரில் கிடைக்கிறது கைதட்டல் பரிசு. உறுத்தல் இல்லாத எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு சினேகாவை போலவே அழகு. நடக்கும்போது ஏற்படும் புடவையின் சரசரப்பு ஒலியைகூட பின்னணி இசையில் துள்ளியமாக அமைத்திருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரை பாராட்டலாம். செட்டிநாட்டு திருமணத்தை இத்தனை சிறப்பாக எந்த படத்திலும் பார்க்கமுடியாது என்ற போதிலும் அதுவே அதிகமாகும் போது டாக்குமெண்ட்ரி போன்ற தோற்றம் ஏற்படுவது நிஜம்.

அறிவுரையில்லாத அதேசமயம் அறிவுறுத்தலான நல்ல கதையை கமர்ஷியல் கலப்படங்களின்றி இயக்கியிருக்கும் கரு. பழனியப்பனை குடும்பம் குடும்பமாக சென்று வாழ்த்தலாம்.


'பிரிவோம் சந்திப்போம்' பார்ப்போம்.