திரைவிமர்சனம்

 

ஜெயம் கொண்டான்

தன் குருவின் பெயரைக் காப்பாற்றும் விதத்தில் எடுத்த எடுப்பிலேயே ஒரு நல்ல படத்தைத் தந்திருக்கிறார் மணிரத்னத்தின் சிஷ்யர் கண்ணன்.

அண்ணன்-தங்கை மோதல்தான் படத்தின் மையக் கதை. கிட்டத்தட்ட அக்னி நட்சத்திரம் ஸ்டைலில் விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார் அதை.லண்டன் ரிட்டர்ன் வினய், தான் சம்பாதித்து அப்பாவுக்கு அனுப்பிய பணத்தை வைத்து பெரிய அளவில் தொழில் செய்ய நினைக்கிறார். ஆனால் அந்தப் பணத்தை யாரிடம் கொடுத்தார் என்பதைக் கூட சொல்லாமல் இறந்துவிடுகிறார் வினய்யின் அப்பா. உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் வினய்க்கு, மதுரைப் பக்கம் திருமங்கலத்தில் அப்பா ஒரு வீடு வாங்கி வைத்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. வெறும் வீடு மட்டுமல்ல... அந்த வீட்டுக்குப் பின்னணியில் அப்பாவுக்கு ஒரு (சின்ன) வீடு இருப்பதும் தெரிய வருகிறது.


 

அதை விற்று தொழில் தொடங்கலாமே என்று கிளம்பும் வினய்க்கு தங்கை லேகா வாஷிங்டனே (அப்பாவின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர்) வில்லியாகிறார். இதனால் வீட்டை விற்க முடியாமல் போகிறது. ஆனால் மதுரையின் பிரபல தாதா கிஷோர் குமார் துணையுடன் அதே வீட்டை விற்க முயல்கிறார் லேகா. அப்போது ஏற்படும் மோதலில் கிஷோரின் மனைவி அதிசயா கொல்லப்படுகிறார்.கோபம் அடைந்த கிஷோர், வினய்யை பழிவாங்கப் புறப்படுகிறார். இடையில் பாவனாவுடன் காதல், விறுவிறுப்பான கிளைமாக்ஸ் என பரபரப்பாகப் போகிறது படம்.

பணம் சம்பாதிப்பதற்காக ஏதோ ஒரு தேசத்தில் கடுமையாக உழைக்கும் இளைஞர்கள், சொந்த தகப்பன் இறப்புக்குக் கூட வரமுடியாமல், கொள்ளி போடுவதையும், காரியம் செய்வதையும் சிடியில் பார்த்து ஆறுதல் பட வேண்டியிருக்கும் அவலத்தை வினய் சிறப்பாகப் பிரதிபலித்திருக்கிறார். வீட்டை விற்க வரும் வினய்யை விரட்ட பாவனாவும் சரண்யா மோகனும் போடும் நாடகங்களும், அதிலிருந்து தப்பி பாவனாவை வினய் மடக்கும் விதமும் சுவாரஸ்யம். ஹீரோயின் பாவனாவை விட, தங்கை பாத்திரத்தில் வரும் லேகா வாஷிங்டனுக்கு நடிக்க நிறைய வாய்ப்பு.


 

அதேபோல மெயின் காமெடியன் விவேக்கை விட, சந்தானம் மற்றும் கிருஷ்ணாவின் காமெடி கிச்சுகிச்சு மூட்டுகிறது.

வில்லன் கிஷோர், அவரது மனைவியாக வரும் அதிசயா என் அனைவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

ரன், சண்டைக்கோழி என பல படங்களை இந்தப் படத்தின் காட்சிகள் நினைவுபடுத்தினாலும், ரசிகர்களை அலுப்புத் தட்டாமல் பார்க்க வைக்கும் உத்தி இயக்குநருக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

இசை வித்தியாசாகரா...? நம்ப முடியவில்லை. வசவசவென்ற பாடல்கள் படத்தின் வேகத்துக்கு மிகப் பெரிய தடை. பட்டுக் கோட்டை பிரபாகரின் வசனங்களும், பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் விறுவிறு நகர்வுக்கு கைகொடுக்கின்றன.

அந்த கிளைமாக்ஸ் சண்டையில் எடிட்டர் பளிச்சிடுகிறார்.

படத்தின் தலைப்பு பாக்ஸ் ஆபீஸிலும் எதிரொலிப்பது நிச்சயம்!

<<முற்செல்ல