திரைவிமர்சனம்

 

வேதா

முக்கோண காதல். ஒரு முனையில் காதலி. மற்ற இரு முனைகளில் அண்ணனும், தம்பியும். கொஞ்சம் விவகாரமான கதை. அதை விரசமில்லாமல் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ஆர். நித்யகுமார்.


ஷீலாவுக்கும் அருண்விஜய்க்கும் காதல் வருகிறது. இதற்கிடையில், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக தம்பி ஜெரோவதன் சொல்ல, அவளையே திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி கொடுக்கிறார் அருண். ஆனால் தம்பி காட்டுவது வருங்கால அண்ணியாக வரப்போகிற ஷீலாவை. 'ஷீல்' என்று அலற வேண்டிய அருண், அவசரம் காட்டாமல் அவளையே தம்பிக்கும் கட்டி வைக்கிறார். முதலிரவன்று அருண் அறையில் ஷீலா. அதிர்ந்து போகும் அருணிடம், தான் கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். தன் மனைவி அண்ணனின் காதலி என்று தெரிந்தும் அதை எதிர்கொள்ள முடியாத ஜெரோவதனும் எங்கோ ஓடிவிட, கடைசி நான்கு ரீல்களில் கண்களில் குளம் கட்டி அடிக்கிறார் இயக்குனர்.

சாக்கடையில் விழுந்துவிடும் நாய்க்குட்டியை எடுத்துக் கொடுக்கும் போதே ஷீலாவின் மனசுக்குள் விழுந்துவிடுகிறார் அருண். ஆரம்ப காட்சிகளில் அருண் அத்தனை அழகு. பிற்பாதியில் சேது ரேஞ்சுக்கு மாறிவிடும் அவர், பரிதாபத்தை வாரிக் கொள்கிறார். ஆனாலும், அவரின் முரட்டு உடம்புக்கு முன் இது போன்ற கேரக்டர்கள் எடுபடாமல் போகவும் வாய்ப்புள்ளது. ஆனாலும் கொடுத்த கேரக்டரை உள்வாங்கிக் கொண்டு 24 கேரட்டாக ஜொலித்திருக்கிறார்.

புதுமுகம் ஜெரோவதன் அந்தகால பிரதாப் போத்தனை நினைவுபடுத்துகிறார். எதற்கெடுத்தாலும் எமோஷனல் ஆவது இவரது கேரக்டராக இருக்கலாம். இன்னிக்கு என்ன கிழமை என்று கேட்டால் கூட, தற்கொலைக்கு முயல்வார் போலிருக்கிறது. கடவுளே...

ஜீரா போலிருக்கிறார் ஷீலா. நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

தானே டப்பிங் பேசியிருக்கிறார் வில்லன் சத்ய பிரகாஷ். ஏதோ சிறைச்சாலைக்கு போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தால், இவரே உருவாக்கியிருக்கும் சிறையாம் அது. பயங்கரம். அங்கே சிக்கிக் கொண்டு மாதக்கணக்கில் சிறையில் இருக்கிறார் அருண்விஜய். ஆரம்பத்தில் சத்யபிரகாஷை போலீஸ் என்று நம்ப வைத்து அருண் ஏமாற்றுவதும் சுவாரஸ்யம்.

கொடுத்த கடனை வசூலிக்க போகும் கருணாஸ் சிங்கமுத்து கோஷ்டிகளிடம் மாட்டிக் கொண்டு திணறும் போது சின்னாபின்னமாகிறது தியேட்டர். டேய், அவ்வளோ பெரிய பேங்கில பணம் இல்லையாம்டா என்று தனது செக் ரிட்டர்ன் ஆனது பற்றி சிங்கமுத்து கமெண்ட் அடிக்கையில் சர்வ நாடியும் ஒடுங்கி பார்க்கிறாரே ஒரு பார்வை. அது கருணாசுக்கு மட்டுமே வாய்த்த கலை.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் தண்டையார் பேட்டை புள்ளையாரே ரசிக்கலாம். ஆனால், அடிக்கடி வரும் பாடல் காட்சிகள் அலுப்பு.

இந்த முறையும் ரயிலை தவற விட்டிருக்கிறார் அருண்விஜய்.