திரைவிமர்சனம்

 

அஞ்சாதே

போலீஸ் ஆக நினைப்பவன் பொறுக்கியாகவும், பொறுக்கியாக இருந்தவன் போலீசாகவும் ஆகிற கதை. கவனிக்க வேண்டியது என்னவென்றால் இருவரும் நண்பர்கள்.

க்ளைமாக்சில் நண்பனையே போட்டுத் தள்ளுகிற சூழ்நிலை வருகிறது போலீசுக்கு! என்னாகிறது என்பதை சற்றே நீஈஈஈஈஈட்டி சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.காட்சி முடிந்து சில நொடிகள், அந்த இடத்தை விட்டு அகலாமல் நிற்கிறது கேமிரா. இப்படி நின்ற சிறு வினாடிகள் பெரு நிமிஷங்களாக மாறி, ரீல்களை தின்று அகோர ஏப்பம் விடுகிறது. (துணிச்சலா வெட்டிப் போடுங்க சாமி).

விடிந்தால் மதுக்கடை, விரல் நீட்டினால் சண்டை என்று திரியும் நரேனுக்கு லட்சியம் என்று பெரிதாக எதுவுமில்லை. ஆனால் அவரது நண்பர் அஜ்மலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிவிட வேண்டும் என்பதே லட்சியம். “நீயேல்லாம் உருப்படவே மாட்டே. அவனையும் பாரு. சீக்கிரம் எஸ்.ஐ ஆயிடுவான்” என்று உசுப்பேற்றும் அப்பாவை நோஸ்கட் பண்ண குறுக்கு வழியில் முயற்சிக்கும் நரேன், காக்கி சட்டையை கைப்பற்றிவிடுகிறார். படித்து படித்து பரீட்சை எழுதிய அஜ்மல் நிலைமைதான் பரிதாபம். தோல்வியில் முடிகிறது லட்சியம். எதிரெதிர் வீட்டில் இருக்கும் இருவருக்குள்ளும் பகைமை முளைக்கிறது. கடைசிவரை நரேன் நட்பை புரிந்து கொள்ளாத அஜ்மல், புரிந்து கொள்கிற அந்த நேரம், பதற வைக்கும் பரிதாப நேரம்!

ரவுடியாக இருக்கும்போது இருக்கிற வீரம் காக்கி சட்டையை மாட்டியதும் காணாமல் போய்விடுகிறது நரேனுக்கு. அசால்டாக மூட்டையை திறந்து பெண்டாட்டி தலையை எடுத்துக் காட்டும் அந்த கொலையாளி தொடங்கி, சாலையில் கொலை உயிராக கிடக்கும் அந்த பெயர் தெரியாத பையன் வரைக்கும் நரேனின் மனசை உலுக்கி எடுக்கிறார்கள். இந்த லட்சணத்தில் நண்பனே குற்றவாளியாக போலீஸ் ஸ்டேஷனில் ஜட்டியோடு நிற்க, பதறி போகிறார். சித்திரம் பேசுதடி ஸ்டைலில் இருந்து மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும், சூழ்நிலைக்கு பலியாகிவிட்டதை அற்புதமாக வெளிப்படுத்த முடிகிறது அவரால்.

ஆறடி உயரத்தில் அதிர வைக்கிற பார்வையோடு வருகிறார் அஜ்மல். கடைசிவரை தான் தோற்றுப் போனதை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பதையும், லட்சியத்திற்கு எதிர் திசையில் தள்ளப்பட்டு, ஒரு சந்தர்பத்தில் குரல் உடைந்து “போன் மிரட்டல்” விடுப்பதையும் ரணத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.

திடீர் வில்லனாகியிருக்கிற பிரசன்னாவும், பாண்டியராஜனும், மிரட்டியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக பிரசன்னா. இப்படியரு கதையில் நடிக்க பிற ஹீரோக்கள் யோசிப்பார்கள். மூக்கை தொடும் முடி. டார்ச் லைட் பார்வை என்று அசத்தியிருக்கிறார். சாக்லெட் பாய் என்று நினைத்தால் சரக்கு பொட்டலமாக இருக்கிறார். பிரமாதம்..னா!

மேக்கப் இல்லாத விஜயலட்சுமிக்கு மேக்கப் இல்லாத நடிப்பும் கூட! தன்னை கற்பழித்தவனோடுதான் சேர்ந்திருக்கிறாய் என்று அண்ணனிடம் அந்த கடைசி நிமிடத்திலாவது சொல்லி தொலைத்திருக்கலாமே?

பெண் கடத்தல், பேரங்கள் என்று நீள்கிற கதையில், அங்கங்கே மிஷ்கினின் நுணுக்கங்கள் பிரமிக்க வைக்கிறது. யாரோ ஒருவன் கொலையுண்ட இடத்தில், தான் விற்க வைத்திருந்த பூக்களை இறைத்துவிட்டு செல்கிற கிழவி, “நீதான்ப்பா உண்மையான போலீஸ்காரன்” என்று நரேனை பாராட்டிவிட்டு போகிறாளே, மெய் சிலிர்த்து போகிறது. பின்னணி இசையில் பிரமிக்க வைத்திருக்கிறார் சுந்தர் சி பாபு. கத்தாழ கண்ணாலே பாடல் இன்னொரு வாளமீனு. இருட்டில் கதை சொல்கிறது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு. டெக்னாலஜி வளராத சிற்றூர் தியேட்டர்களின் திண்டாட்டத்தை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.

படத்தில் சம்பந்தப்பட்டவர்கள், அஞ்சாதே என்று ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.