திரைவிமர்சனம்

 

ஆயுதம் செய்வோம்

திருட்டு தாதா ஒருவனை, தேசப்பிதாவின் கொள்கைகளால் திருத்துகிற ஹீரோவின் கதை. மியூசிய சரக்குகளில் ஒன்றாகிப்போன காந்தியின் அகிம்சை தத்துவத்தை, கமர்ஷியல் கடை விரித்து ஜோராக வியாபாரம் செய்திருக்கிறார் இயக்குனர் உதயன்.

இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கு ஒரு கதராடை சல்யூட்! "காந்தி மியூசியத்தில் தங்கி சேவை செய்ய வேண்டும்." இது இரண்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தீர்ப்பு. அதன்படி மதுரைக்கு வந்திறங்கும் சுந்தர்சி, விவேக் இருவரும் அடிக்கிற கூத்தும் கும்மாளமும் முதல் பாதி. இரண்டாம் பாதியில் தன்னையறியாமல் காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்படும் சுந்தர் சி, அகிம்சா வழியிலேயே வில்லன்களை திருத்துகிறார். "காதில பூ வைக்கிறாங்கப்பா" என்று ஒரு காட்சியலாவது அலுத்துக் கொள்ள வேண்டுமே? ம்ஹும்!

தண்டனை பெற்று மதுரைக்கு வந்திறங்குகிற சுந்தர், விவேக் கோஷ்டி அடிக்கிற ஜோக்குகளில் கவனமாக இருந்திருக்கிறார் இயக்குனர். இல்லையென்றால், தேசப்பிதா சேதப் பிதா ஆகியிருப்பார். குறிப்பாக அந்த மாளவிகா காட்சி. சத்திய சோதனை புத்தகத்தை விற்க வேண்டும் என்று தெருத்தெருவாக அலையும் தியாகி நாசர், மருத்துவமனையில் படுத்துக் கொள்ள, அவர் திரும்பி வருவதற்குள் அத்தனை புத்தகங்களையும் விற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் சுந்தரும், விவேக்கும். அதற்காக அவர்கள் கையாளும் டெக்னிக், கொஞ்சம் அபாயகரமானது. சத்திய சோதனை புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். அந்த தேர்வில் வெற்றியடைபவர்கள் மாளவிகாவுடன் போட்டோ எடுத்துக் கொள்ளலாம். சிரிப்பூட்டும் சிந்தனைதான். அதே நேரத்தில் திகைப்பூட்டவும் வைக்கிறது. காந்தி பற்றி மாளவிகா லெக்சர்! துணிச்சல்தானய்யா உங்களுக்கு!

முதல் பாதியோடு இரண்டாம் பாதியை முடிச்சு போடும், விஜயகுமார் கொலை பரிதாபம். சாகும்போது வாழ்க வளமுடன் என்று அவர் ஈனஸ்வரத்தில் முனகுவதும், அந்த வார்த்தை மட்டும் சுந்தர் சியை விடாமல் துரத்துவதும் பேய்க்கதை எஃபெக்ட்டை தருகிறது.

தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாகியிருக்கிறார் சுந்தர்சி. தனது எல்லா படங்களை போலவும் இந்த படத்திலும் ஆடவோ, நடிக்கவோ அலட்டிக் கொள்ளவே இல்லை சுந்தர். ஆனாலும், உண்ணாவிரதம் இருக்கும் இவரை, கோழை என்று நினைத்து வீடுகட்டும் பொன்னம்பலம் விலா எலும்பு நொறுங்கி ஓடுகிற காட்சி தூள் கிளப்புகிறது.

அதிகம் வேலையில்லை அஞ்சலிக்கு. காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சலி! தனது காதலன்தான் கொலைகாரன் என்று தெரியவர, அதிர்ச்சியும் கோபமும் இழையோட சுந்தருடன் டு விடுவதும், பின்பு உண்மை தெரிந்து அணைத்துக் கொள்வதும் அழகு.

போலீஸ் அதிகாரியாக வரும் நெப்போலியனின் கம்பீரமும், மிடுக்கும் அதிர வைக்கிறது. கனரக கதையோட்டத்தில் விவேக்கின் காமெடி, வழவழப்பான லுப்ரிகேன்ட் ஆயில்! மதுரை மண்ணில் சுந்தரோடு சேர்ந்துகொண்டு இவர் அடிக்கிற லு£ட்டியில் தியேட்டர் அதிர்கிறது. ஒரு காட்சியில் வந்தாலும், கலெக்டர் சுகன்யா கண்ணிலேயே நிற்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் இனிமை. குறிப்பாக இன்னும் ஒரு வானம்...

சத்திய சோதனையை கொண்டு உருவாக்கப்பட்ட 'தைரிய சாதனை!'

<<முற்செல்ல