திரைவிமர்சனம்

 

பழனியப்பா

அண்மையில் வந்த `கல்லூரி' படம் கல்லூரிக்குச் செல்லும் பொறுப்பான மாணவர்களைப் பற்றி அவர்களின் நட்பு, குடும்பம் பற்றி `டச்'சிங்குடன் சொன்னது. அதற்கு நேர், எதிரான ஒரு படமாக வந்திருக்கிறது `பழனியப்பா கல்லூரி'.

கதாநாயகனாக பிரதீப் என்ற புதுமுகம், கதாநாயகிகளாக மதுஷாலினி, அர்ஜுமான் மொகல், அட்சயா மற்றும் ரோகிணி, ஷகீலா, கஞ்சா கருப்பு, `சண்டைக்கோழி' ராஜா, தரணி, பாபூஸ் ஆகியோர் நடிப்பில் சீனு ஒளிப்பதிவில், `ஜெயம்' பட்நாயக் இசையில், பவன் இயக்கியிருக்கிறார்.விளம்பரத்திலேயே தைரியமாகச் சொல்கிறார்கள் கொஞ்சம் படிக்க நிறைய கூத்தடிக்க என்று.

படத்திலோ முழுக்க முழுக்க கூத்தடிக்கிறார்கள்.

கல்லூரியில் சைட் அடிப்பது, பேராசிரியர்களை அவமானப்படுத்துவது, ஈவ் டீஸிங் செய்வது, ராகிங் செய்வது, தம் அடிப்பது, தண்ணியடிப்பது, கஞ்சா வியாபாரம் செய்வது என்று அனைத்து கெட்ட பழக்கங்களையும் பட்டியல் போட்டுச் செய்கிறார்கள்.

பெண்களிடம் அருவருப்பாக, ஆபாசமாக இரட்டை அர்த்த வசனம் பேசுவது, ரவுடித்தனம் செய்வது இதுதான் மாணவர்களின் பொழுதுபோக்காகக் காட்டப்படுகிறது. எல்லாவற்றின் உச்சமாக கல்லூரி செல்லும் மாணவி குடும்பக் கஷ்டத்துக்காக விபச்சாரம் செய்வதாகக் காட்டுகிறார்கள். ஒரு மாணவன் 24 மணி நேரமும் குடித்துக் கொண்டே இருக்கிறான்.

படம் முழுக்க சிகரெட் புகைத்துக் கொண்டும் குடித்துக் கொண்டுமே இருக்கிறார்கள்.நகைச்சுவை என்கிற பெயரில் ஆளாளுக்கு ஆபாசமாகப் பேசி வெறுப்பேற்றுகிறார்கள்.


கெட்ட பழக்கங்களின் கூடாரமாக கல்லூரியைக் காட்டி கேவலப்படுத்துகிறார்கள். படத்தில் 1956ல் கல்லூரி எப்படி இருந்தது 1976ல் எப்படி இருந்தது என்றெல்லாம் ஆரம்பத்தில் காட்டுகிறார்கள். ஆனால் 1956-ல் கூட கூட இப்படி தரக்குறைவாக தொழில்நுட்பக் குறைபாட்டுடன் படம் வந்திருக்காது.

படத்தில் தொடரும் அதிர்ச்சியில் பேரதிர்ச்சி இப்படிப்பட்ட படத்தை அனுபவமிக்க அன்பாலயா பிலிம்ஸ் தயாரித்துள்ளதுதான்.