திரைவிமர்சனம்

 

உளியின் ஓசை

சரித்திரப் படங்களின் ஆயுள், கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஈசலின் வயதை எட்டி வருகிற நிலையில், மற்றுமொரு சரித்திரப்படம். ஆனால், ஆயுளுக்கும் ரசிக்கிற மாதிரி கருத்தையும், எழுத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் கலைஞர்.

அதிலும், க்ளைமாக்சுக்கு முன்பு கதையில் வருகிற ட்விஸ்ட், மனசை உலுக்கும் ஆயிரம் வாட் ஷாக்! சோழ மன்னன் ராஜராஜன், காலமெல்லாம் நிலைத்திருக்கும் விதமாக ஒரு கோவில் கட்ட நினைக்கிறான். புகழ்பெற்ற சிற்பியான வினித்திடம் சிலை வடிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். ஆடற்கலையை வெளிப்படுத்தும் 100 சிலைகளை வடிக்க முடிவெடுக்கும் வினித், மாடலுக்கு ஒரு நடன மங்கையை தேடுகிறார். சோழ மண்டலத்தின் அரசவை நர்த்தகி கூட, வினித்தின் தேர்வில் ஃபெயில் மார்க் வாங்க, ஆட்டுக்காரியின் பேத்தி ஒருத்தி அசத்துகிறார் நாட்டியத்தில்! பிறகென்ன, அவரையே மாடலாக வைத்து சிலைகள் உருவாகிறது.

இதற்கிடையில் அரசவை நர்த்தகி அட்சயாவுக்கு வினித் மேல் காதல். வினித்திற்கோ ஆட்டுக்காரியின் பேத்தியான கீர்த்திசாவ்லா மீது காதல். இந்த முக்கோண காதலின் முடிவு, பெருந்தச்சன் வினித்திற்கு மட்டுமா அதிர்ச்சியை கொடுக்கிறது? படம் பார்க்கிற நமக்கும்தான்! சிற்பி கேரக்டருக்கு வினித்தை விட பொருத்தமாக வேறு நடிகர் கிடைக்க மாட்டார். அந்தளவுக்கு கச்சிதம். அரசவை நர்த்தகி அட்சயா முன், தானே நாட்டியம் ஆடி அரசவையை அசர வைப்பது அழகு. தன்னை கொல்ல வருபவனுக்கு கூட, பாசத்தோடு பச்சிலை போட்டு அனுப்புவதும், அட்சயாவின் உயிரை காப்பாற்றிவிட்டு, அதை அவரிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதும், மனிதாபிமானத்தின் அடையாளம்.

எக்குதப்பான அழகு அட்சயாவுக்கு. துவக்கத்தில் நீலாம்பரியாக தோன்றினாலும், முடிவில் கைதட்ட வைக்கிறார். இவர் ஆடும் அந்த பாம்பு டான்ஸ் பிரமிப்பு!

ஆட்டுக்காரியின் பேத்தியாக கீர்த்திசாவ்லா. நடிக்க அதிக சந்தர்ப்பம் இல்லை.


 

உதடு சுழிப்பதும் மைனஸ். கஞ்சா கருப்பும், கோவை சரளாவும் அவ்வப்போது சிரிக்க வைத்தாலும் பெரும்பாலான காட்சிகளில் எரிச்சலூட்டுகிறார்கள். போதாததற்கு மனோரமா வேறு. இவர் ஆடுகிற ஆட்டத்தை கூசாமல் நறுக்கினால் நேரம் மிச்சம். இளையராஜாவின் இசையில் எல்லா பாடல்களும் தேன்! பாடல் வரிகளும் சிலை வடிப்பதை போல் அழகாக வடிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மு.மேத்தா எழுதியிருக்கும் புலர்கின்ற பொழுது காட்டும் பாடல் அற்புதம். பல இடங்களில் உணர்ச்சி ததும்பும் வசனங்களை ராஜாவின் பின்னணி இசையே பேசிவிடுகிறது. 'சிறகிருக்கிறது என்பதற்காக சூரியனுக்குள் குதிப்பாயா?' என்று அனல் கக்கும் கலைஞரின் பேனா, ஆங்காங்கே நகைச்சுவையையும் தொட்டிருக்கிறது. கிழவியை பின் தொடரும் வினித், அவரை காதலி என்று நினைத்து அழைக்க, கிழவியோ 'நான் கல்யாணம் ஆனவங்க' என்று பதறி ஓடுவதை சொல்வதா? தனது பெயரை சொல்லும் முன் 'அதாவது' என்று ஆரம்பிக்கும் வினித்திடம், 'அதாவது என்று ஒரு பெயரா' என்று அட்சயா நக்கலடிப்பதை சொல்வதா? ருசிக்க ருசிக்க பரிமாறியிருக்கிறார் கலைஞர்.

படத்தை எந்த இடத்திலும் தொய்வு விழாதபடி நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் இளிவேனில். கலைஞரின் கலையுலக வரலாற்றில் இந்த 'இளவேனில்' காலம் மறக்கவே முடியாததுதான்

<<முற்செல்ல