திரைவிமர்சனம்

 

காளை

ஊரையே நடுங்க வைக்கிற ரவுடி ஜீவா, அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜீவாவின் பெண்ணான வேதிகாவை கைபிடிக்க துடிக்கிறான். சம்பந்தப்பட்ட வேதிகாவே போலீசில் புகார் கொடுக்க போனாலும், 'போய் வேலையை பாரும்மா' என்கிறார்கள் காவல் நிலையத்தில். இந்த நேரத்தில் இன்னொரு ஜீவா இடையில் நுழைந்து பெண்ணை கவர, ஒருவரையருவர் முட்டிக் கொ(ல்)கிறார்கள். கமிஷனர் ஜீவாவை தேனி மாவட்டத்து ஜீவாவான சிம்பு போட்டுத்தள்ளுவது இரத்தம் கசியும் முடிவு என்றால், அவருடைய பெண்ணான வேதிகாவை இதற்கு கருவியாக பயன்படுத்திக் கொள்வது, கண்ணீர் கசியும் ட்விஸ்ட்!


 

மூன்று ஜீவாக்களுக்கும் நடுவில் நடக்கிற முக்கோண மோதலை புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் பிடிக்கிறது. இதில் ஒரு ஜீவா பரலோகம் போனபின், எவ்வித குழப்பமும் இல்லாமல் தொடர்கிறது மீதி. கல்லூரியில் படிப்பது போல் சென்னைக்கு வந்து, உதவி கமிஷனர் லாலை தன் சொந்த ஊரான தேனிக்கு வரவழைக்கிறார் சிம்பு. ஏன் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக்! கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக மூன்று கொலைகளை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறாள் சிறுமி ஒருத்தி. பின் வரும் வருடங்களில் வளர்ந்து சிம்புவின் பாட்டியாவதும் அந்த சிறுமிதான். மாவட்டத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் அந்த பாட்டியை போட்டுத்தள்ளிவிடுகிறார் லால். விடுவாரா சிம்பு? அவரைதேனிக்கு வரவழைத்து பலி கொடுக்கிறார். லால்-சிம்பு சண்டையில் இந்த படத்திற்கு சம்பந்தமே இல்லாத தனுஷ் தலையையும் உருட்டியிருக்கிறார் சிம்பு. 'நான் பொல்லாதவன்' என்று லால் முழங்க, 'நான் கெட்டவன்' என்று சிம்பு பொங்குவது சுவாரஸ்யம்தான். அதேநேரத்தில் வயதில் மூத்தவரை திருமணம் செய்கிற விஷயத்தை அலசி, மறுபடியும் தனுஷை வம்புக்கு இழுத்திருப்பது ஓவர்! ஊருக்குள் தன் பரிவாரங்களோடு உள்ளே வரும் லால், சிம்புவின் டெக்னிக் அமுக்கல்களில் தன் சகாக்களை பறி கொடுத்துவிட்டு தவிப்பது த்ரில்! .


 

நாபிக் கமலமே நைந்து போகிற அளவுக்கு செல்போனில் கத்துகிறார் சங்கீதா. சிம்புவின் அத்தை. இவர் ஒருதலையாக சிம்புவை காதலிப்பதெல்லாம் அநியாயம்! 'ஏய்..நீ இதயம் முரளியோட ஒண்ணா படிச்சவனாச்சே?' என்று கல்லூரி தோழனை கலாய்க்கிற சந்தானத்தை ரசிக்கலாம். தன் அப்பாவை கொல்லப்போகிறார் என்று தெரிந்தே சிம்புவோடு பயணம் செய்யும் வேதிகாவுக்கு அப்பாவி முகம். கவர்ச்சி காட்டுகிற விஷயத்தில் அடப்பாவி ரகம்.ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும், கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகளும் அடங்காத காளையின் கழுத்தில் தொங்கும் அழகான மணிகள். அம்மாடி ஆத்தாடி ஸ்டைலில் ஒரு பாடல். தாளம் போட வைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். திமிரு படத்தின் மறு வடிவமாகவே இருக்கிறது காளை. அந்த படத்தின் நேர்த்தி இந்த படத்திலும் இருந்திருந்தால், நிஜத்திலும் திமிராகவே நடைபோட்டிருக்கலாம் இயக்குனர்.