திரைவிமர்சனம்

 

தூண்டில்

லண்டனில் வசிக்கும் தம்பதி ஷாம்&சந்தியா. குழந்தை பெற்றுக் கொள்ள முடியாததால் மனம் நொந்திருக்கிறார் சந்தியா. செயற்கை முறையில் கரு உண்டாக்குகிறார் டாக்டர் ரேவதி.


குழந்தை பிறக்கிறது. திடீரென்று ஒருநாள் குழந்தை காணாமல்போகிறது. அப்போது குழந்தையுடன் அதிரடியாக நுழையும் திவ்யா, இந்த குழந்தை இனிமே என்னோடதான் இருக்கும். நான் யார்ங்கறதை உன் கணவர்ட்ட (ஷாம்) கேட்டுக்கோ எனச் சொல்லிவிட்டு புறப்படுகிறார். அப்போதுதான் ஷாம், திவ்யாவுக்குமான காதல் அம்பலமாகிறது.

கோபம் அடைந்த சந்தியா, ஷாமை பிரிகிறார். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக ஷாமை கொலை செய்ய முயல்கிறார் திவ்யா. இவர்களுக்கு இடையில் சிக்கிக் தவிக்கிறது குழந்தை. இந்த குழப்பத்துக்கு விடை சொல்கிறது படம்.

போலந்து அணிக்கும், பிரான்சு அணிக்கும் இடையில் சிக்கிய கால்பந்துபோல் திவ்யா&சந்தியாவுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமாகிறார் ஷாம். கல்யாணத்துக்கு முன்பே யாரையாவது காதலிச்சிருக்கியான்னு எத்தனை முறை கேட்டேன். இல்லைன்னு சொல்லி ஏமாத்திட்டியே என்ற சந்தியாவின் வார்த்தையிலும் கடற்கரையில் என்னை தனியாக தவிக்கவிட்டு சென்றவன்தானே நீ; உன்னை சும்மா விடமாட்டேன் என்ற திவ்யாவின் கனல் கண்களுக்குமிடையே தவிக்கும் ஷாம் அனுதாபங்களை அள்ளுகிறார்.

என் குழந்தை வேணும் என்று கதறும் சந்தியா உன் கூட வாழ மாட்டேன்; நான் எங்காவது போறேன் என்றபடி வீட்டை விட்டு வெளியேறும்போது, மனதை நெருடுகிறார். லேடி ஜேம்ஸ்பாண்டு ரேஞ்சுக்கு ஜெர்க்கின், டைட் பேண்ட்டுமாக வில்லித்தனத்தில் வெளுக்கிறார் திவ்யா.

Ôகுழந்தையை உங்கிட்ட கொடுத்திட்டு போகவரலே, காட்டிட்டு போக வந்தேன் என்றபடி சந்தியா கையிலிருக்கும் குழந்தையை வெடுக்கென பிடுங்கிச் செல்லும் முரட்டுத்தனமும், உன்னை சுட்டுத்தள்ளணும்போல் இருக்கு என்று துப்பாக்கி காட்டி, ஷாமை மிரட்டும் கோபமுமாக விர்ராகிறார் திவ்யா.

யாருக்கு குழந்தை சொந்தம் என்று லண்டன் கோர்ட்டில் நடக்கும் வழக்கில் ஜெயிக்கப்போவது திவ்யாவா? சந்தியாவா? என்ற பரபரப்பு ஆங்கில வசனங்களையும் மறக்கடித்து ஆர்வத்தை தூண்டுகிறது. ஒரே டிராக்கில் கதை செல்வதால் அலுப்பு தட்டுகிறது.

நாட்டாமை, பெத்தராயுடுவாக வந்து வெள்ளைக்கார பெண்ணை அசத்தும் விவேக், அவரிடம் லிப் டு லிப் கிஸ் வாங்கி கிறங்கிப்போவது கிளுகிளு. இந்த நாட்டாமை நாடகத்தை இன்னும் எத்தனைமுறைதான் அரங்கேற்றப்போகிறாரோ விவேக். அதேவெள்ளைக்காரப் பெண் திருக்குறள் பேசி திணறடிப்பது தூக்கல்.

வில்லனாக வரும் ஆர்.கே. அளவு மிகாமல் அதட்டுகிறார். அபிஷேக்.ரே.வின் இசை அடங்கிப்போகிறது. லண்டன் வீதிகளில் டி.கவியரசின் காமிரா குத்தாட்டம் போட்டிருக்கிறது. நம்மூர் சின்னவீட்டு சண்டையை லண்டனில்போய் எடுத்திருக்கிறார்கள். பின்னணியில்தான் மாற்றமே தவிர திரைக்கதையில் புதுமை இல்லை!