திரைவிமர்சனம்

 

தோட்டா

அக்கு(ள்) வேறு ஆணி வேறாக காட்டுகிறார்கள் ப்ரியாமணியை! ஸ்கீரினே பற்றிக் கொள்கிற அளவுக்கு ஜீவனின் சண்டைக்காட்சிகள். இவற்றை சுமக்கும் கம்பீர குதிரையாக திரைக்கதை. போதாதா? நிஜ தோட்டாவை விட வேகம், இந்த நிழல் தோட்டாவில்! அநாதை ஜீவனை எடுத்து வளர்க்கிறார் போலீஸ் அதிகாரி சம்பத்ராஜ். அதுவும் எப்படி? தான் சொன்னதை செய்யும் அடியாளாக.


அவர் கேட்பதையெல்லாம் செய்து கொடுக்கும் ஜீவன், தான் கேட்கிற ஒன்றை செய்ய வேண்டும் என்று சம்பத்ராஜை நிர்பந்திக்கிறார். அது...? ப்ரியாமணிக்கு போலீஸ் வேலை வாங்கித்தர வேண்டும் என்பது. அதற்கு விலையாக சம்பத்ராஜ் பிரியாமணியையே கேட்க, அதுவரை போலீசுக்கும் ரவுடிக்கும் நிலவி வந்த உறவு, தீராத பகையாகிவிடுகிறது. ஜீவனை என்கவுன்டரில் போட்டுத்தள்ள துடிக்கிறார் அதிகாரி சம்பத்ராஜ். நீ சுடணும்னா மேல் அதிகாரிகிட்ட பர்மிஷன் கேட்கணும். ஆனா, நான் நினைச்சா போட்டு தள்ளிட்டு போயிகிட்டே இருப்பேன் என்று நேருக்கு நேர் துப்பாக்கி தூக்குகிறார் ஜீவன். முடிவு என்ன? படம் முழுக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் பரபரப்பு. யுத்த களத்தில் ரோஜா முளைத்த மாதிரி, அங்கங்கே அழகான காதல் காட்சிகள். கோவிலில் தன் அம்மா உட்கார்ந்த அதே படியில் ப்ரியாமணி உட்கார, கசிந்துருகுகிறார் ஜீவன்! டிவி யிலிருந்து எல்லாவற்றையும் ப்ரியாமணி வீட்டிற்கு அனுப்பும் அவர், வாசலில் ஒரு பொதுத் தொலைப்பேசியையும் மாட்டி, அதன் வழியாக காதல் வளர்ப்பதும் கவிதை திருவிழாதான்!

'அலட்டிக்கொள்ளாமல் நடிக்க 30 வழிகள்' என்று புத்தகமே போடலாம் ஜீவன். க்ளைமாக்சில் உணர்ச்சிவசப்படுவது தவிர, பிறக்காட்சிகளில் எல்லாம் உடம்பை கூட குலுக்கவில்லை அவர். பாடல் காட்சிகளில் இன்னும் சுத்தம். ஆனால் சண்டைக்காட்சிகளில் நடமாடும் ஆர்.டி.எக்ஸ் போல சுழல்கிறார் மனிதர். தனது கொலைகார அப்பான ராஜ்கபூரை கேஷ§வலாக கொல்கிற காட்சி பயங்கரம்.பட்ஜெட்டில் காஸ்ட்யூம் செலவை குறைக்க படாத பாடு பட்டிருக்கிறார் ப்ரியாமணி. தன் கண்ணெதிரிலேயே விசாரணை என்ற பெயரில் அம்மாவை களங்கப்படுத்தும் போது அதிர்ந்து போகிறாரே, உடலின் எல்லா செல்களும் நடித்திருக்கிறது.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக சரண்ராஜ். குரலில் ரஜினியின் சாயல். சுறுசுறுப்பிலும் அசத்துகிறார். ஜீவனின் உற்ற நண்பராக நடித்திருக்கும் விஷ்ணுபிரியன் கவனிக்க வைக்கிற வரவு. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் மல்லிகாதான் ஜுனியர் ஆர்ட்டிஸ்டை விடவும் சாதாரணமாக இருக்கிறார். இந்த லட்சணத்தில் முந்தானையை அவிழ்த்து கவர்ச்சி காட்டவும் முனைகிறார். பயங்ங்ங்கரம்ம்ம்ப்பா!

ஸ்ரீகாந்த் தேவாவின் ஹிட் லிஸ்டில் சேர்க்க ஒன்றிரண்டு பாடல்களும் உண்டு. ஒளிப்பதிவும், ஷார்ப்பான எடிட்டிங் பலன் சேர்க்கும்!

சின்ன துப்பாக்கி... சத்தமோ பீரங்கி அளவுக்கு!